சிறீதரன் வென்றார் சுமந்திரன் தோற்றார்
இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் கடும் போட்டியாளர்களாகவும் எதிரும் புதிருமானவர்களாகவும் செயற்பட்டுவந்த சிறீதரன்- .சுமந்திரனிடையிலான தேர்தல் வெற்றியாளர் போட்டியில் சிறீதரன் வெற்றி பெற்ற நிலையில் சுமந்திரன் படுதோல்வியடைந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நடந்த இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் இவர்கள் இருவரும் ஒரே கட்சியில் போட்டியிட்டபோதும் எதிர்கட்சியினரைப்போன்றே ஒருவருக்கொருவர் எதிர்பிரசாரம் மேற்கொண்டுவந்த நிலையில் சிறீதரன் 32833 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்ற நிலையில் சுமந்திரன் 15039 வாக்குகளை மட்டுமே பெற்று படு தோல்வியடைந்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத்திற்கான தேர்தலில் சிறீதரன் 35,884 வாக்குகளை ப்பெற்ற நிலையில் இம்முறை 3021 வாக்குகளைமட்டும் குறைவாகப்பெற்று 32,833 விருப்பு வாக்குகளைத் தனதாக்கிய நிலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 27,834 வாக்குகளைப்பெற்ற சுமந்திரன் 12795 வாக்குகளைக் குறைவாகப் பெற்றே படுதோல்வியடைந்துள்ளார்.
இதேவேளை இலங்கைத்தமிழரசுக்கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்துள்ள நிலையில் மக்கள் தன்னை நிராகரித்தால் இனிவரும் காலங்களில் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவே மாட்டேன் என்று சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்துள்ளதனால் தேசியப் பட்டியலுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கட்சி ஓரிரு தினங்களில் தீர்மானிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது