கவிதைகள்

ஆறிரு தடந்தோழ் வாழ்க… கவிதை…. ஜெயராமசர்மா

வேலினைக் கையில் ஏந்தி
வெற்றியைத் தந்த கந்தன்
மூலமாய் நின்ற மூர்த்தி
பொறியிலே வந்த கந்தன்
கார்த்திகைப் பெண்கள் ஏந்த
கந்தனாய் ஆன தெய்வம்
கலியுகம் காக்க என்றும்
கருணையாய் நிற்கும் தெய்வம் !

ஆணவம் அழித்த கந்தன்
அகவிருள் அகற்றும் கந்தன்
பேணிடும் அடியார்க் கெல்லாம்
பேரருள் ஈயும் கந்தன்
நாமெலாம் விரும்பி நிற்கும்
நல்லையில் உறையும் கந்தன்
சேவடி தொழுது நின்றால்
தெரிசனம் தருவான் கந்தன் !

சூரரை வதைத்த கந்தன்
சூழ்ச்சியை அறுக்கும் கந்தன்
மாயிருள் மாயை போக
வந்தனன் ஒளியாய் கந்தன்
ஆழமாம் பிறவி நோயை
அகற்றிட மருந்தாய் நிற்கும்
வேலுடை கந்தன் பாதம்
பற்றுவார் வீடு காண்பார்

ஆறிரு தடந்தோழ் வாழ்க
அடியவர்க் கருள்வாய் வாழ்க
ஏறிய மஞ்ஞை வாழ்க
இன்னருள் ஈவாய் வாழ்க
பேரருள் பொருளே வாழ்க
பேரின்ப மலையே வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீரடியார் எல்லாம் !

 

 

 

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *