இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்: நீதி, நியாயம் நிலைநாட்டப்படும் – கட்டுவாபிட்டியவில் ஜனாதிபதி உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார்.

அத்துடன் கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தியும் இருந்தார்.

ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

பின்னர் ஈஸ்டர் தாக்குலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இதன்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருந்தனர்.

இதேவேளை இந்நாட்டில் மோசமாக அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது என்றும் அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததன் பின்னணியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததென நம்புவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களின் நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்லவெனவும் மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்பதுடன், அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பிலான முழுமையான முடிவொன்றுக்கு வந்து, அந்த முடிவை அடிப்படையாக கொண்டு சாட்சிகளை திரட்டுவதுவதால் மாத்திரம் இந்த விசாரணைகளை கொண்டு நடத்த முடியாதெனவும், வௌிப்படைத் தன்மையுடன் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல் மாற்றத்துக்காக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதாகவும், அரசியலுக்காக நூற்றுக் கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய அழிவாகும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவ்வாறான நிலைப்பாடு நாட்டின் அரசியலுக்குள் காணப்படுமாயின் அந்த நிலைமையை முழுமையாக துடைத்தெறிய வேண்டுனெவும் தெரிவித்தார்.

இரண்டாவது விடயமாக அப்போதைய ஆட்சிப் பொறிமுறையும் இதனுடன் தொடர்பு பட்டிருந்ததா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுவதாகவும் அவ்வாறான நிலை மிகவும் பாதுகாப்பற்றதும் ஆபத்தானதுமான நிலை என்பதோடு, அதன்படி இதற்குள் நடந்தது என்னவென்பதை கண்டறிய வேண்டியது மிக அவசியமானது என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அடுத்தபடியாக, 274க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை பறித்த மற்றும் பெருமளவானவர்களை காயத்துக்கு உள்ளாக்கிய அழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்புக்குரியவர்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

அதேபோல் இவ்வாறான பிரச்சினையினால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்பிலிருந்து சமூகத்தை பாதுகாத்தமைக்காக மதகுருமார்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சமூகத்திற்குள் காணப்பட்ட இணைவு,ஒருமைப்பாடு, நம்பிக்கை சிதைந்து போயிருப்பதாகவும் மற்றுமொரு சமூகத்தின் மீது குரோதத்துடன் பார்க்கும் நிலை உருவாவது சமூக நல்வாழ்விற்கு மிகப்பெரிய ஆபத்தெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நியாயமான விசாரணையொன்றை நடத்த வேண்டியது அவசியமாகும் என்பதையும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கட்டுவாப்பிட்டிய தேவாலய பொறுப்பாளர் அருட்தந்தை மஞ்சுள நிரோஷன் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.