இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவர் பலி?
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.
அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் கடந்தாண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ரொக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த மாதம் 28ஆம் திகதி லெபனான் தலைநகர் பெரூட்டில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைமையிடத்தை குறிவைத்து இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. இந்த அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலில் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், லெபனான் தலைநகர் பெரூட்டில் நேற்று அதிகாலை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் பாதாள அறையில் அமைந்திருந்த ஹிஸ்புல்லாவின் உளவுப்பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
பாதாள அறையில் உள்ள பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் குண்டுகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன.
இந்த அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிஸ்புல்லா தலைவராக இருந்த நஸ்ருல்லா ஏற்கனவெ இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக ஆவார் என கருதப்பட்ட ஹசீம் சபிதீனை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஹசீம் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் வான்வழி தாக்குதலுக்கு பின் ஹசீம் சபிதீன் இருப்பிடமோ? அவரது நிலை குறித்தோ இதுவரை ஹிஸ்புல்லா எந்த தகவலும் வெளியிடவில்லை. இதன் மூலம் வான்வழி தாக்குதலில் ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.