மோடி மிக விரைவில் இலங்கை வர வேண்டும்; ஜெய்சங்கரிடம் அநுர கோரிக்கை
வெகு விரைவில் இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கூறியதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மிக விரைவில் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிக்காலம் ஆரம்பிக்கும் தருவாயில் இந்நாட்டுக்கு வருகைத்தர கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் கையளித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய – இலங்கை உறவுகளைப் பல்வேறு துறைகளூடாக பலப்படுத்திக்கொள்வது குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்தார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடுகள், மின்சக்தி மற்றும் வலுசக்தி, பால் சார்ந்த உற்பத்தித் துறை என்பவை தொடர்பில் இந்தியா கொண்டிருக்கும் அக்கறையை வலியுறுத்திய அவர், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
அதற்கமைய இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக இந்தியாவின் பாரிய சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின் போது இந்திய வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தியாவுடனான தொடர்ப்புகளைத் தொடர்ந்தும் பேணுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை போன்ற இரு தரப்பும் அக்கறை காட்டும் விடயங்கள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதனையடுத்து வெகு விரைவில் இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கூறியதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்தார். – என்றுள்ளது.