ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு வெளிவரலாம்: அச்சத்தில் 30 முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் 30 பேருக்கும் அதிகமானோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் குழப்பத்தில் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஊழல் மோசடி மற்றும் அதிகாரத் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சினைகள் புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அத்துடன் பணக் கஷ்டம், அரசியலில் விருப்பமின்மை, போட்டியிட சரியான ஒரு கட்சியை தேர்வு செய்ய முடியாமை போன்ற பிரச்சினைகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தனது வேட்பாளரை தெரிவு செய்வதில் சில சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்தவுடன் குறுகிய நாட்களிலேயே பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டிய நிலை உருவாகியுள்ளதால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான காலம் கிடைக்காமையே இதற்கான காரணம் என அந்த செய்தி சுட்டிக்காட்டுகின்றது.
இன்னும் சில கட்சிகளில் நிற, சின்னங்களை தேர்வு செய்ய மற்றும் கூட்டணி அமைப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாமை போன்ற காரணங்களாலும் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
பணப் பிரச்சினை காரணமாக பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கவில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க சிங்கள ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், தேர்தலுக்கு செலவளிக்க பணம் இல்லாத காரணத்தினால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என பலர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.