திருப்தியுடனேயே வெளியேறுகிறேன்; மீண்டும் சட்டத்தரணி தொழிலை ஆரம்பித்தார் அலி சப்ரி
மிகவும் சவாலான ஐந்து வருட காலப் பகுதியில் அரசியலில் என்னால் முடியுமான அனைத்தையும் இந்த நாட்டுக்காக செய்தேன். அந்த வகையில் நாட்டுக்கு ஆற்றிய சேவை தொடர்பில் நான் திருப்தியுடன் வெளியேறுகிறேன். இனி அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அரசியலிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளதுடன் மீண்டும் தனது சட்டத்தரணி தொழிலை ஆரம்பித்திருக்கிறார்.
நேற்று வியாழக்கிழமை (03) தனது முன்னைய சட்டத்தரணி தொழிலை ஆரம்பித்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
‘‘எனக்கு உரிய இடத்துக்கு மீண்டும் திரும்பி வந்தமை தொடர்பில் நன்றாக உணர்கிறேன்’’ இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்த அலி சப்ரி தேசிய பட்டியலூடாக ஸ்ரீலங்கா பொதுஜன சார்பில் பாராளுமன்றத்துக்கு வந்ததுடன் நீதியமைச்சராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
பின்னர் பொருளாதார நெருக்கடி, அரகலய காலத்தில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகிய பின்னர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
‘‘மிகவும் சவாலான காலப் பகுதியில் நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன். ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி, பின்னர் பொருளாதார நெருக்கடி, தொடர்ந்து அரகலய போராட்டம் என பாரிய நெருக்கடி நேரத்தில் நான் அரசியலில் இருந்தேன். ஆனால் அந்த சவாலான காலப் பகுதியில் நான் நாட்டுக்கு ஆற்றவேண்டிய சேவையை முற்றுமுழுதாக ஆற்றியிருக்கிறேன். முழுநேர அரசியல்வாதிகளினால் மட்டும் நாட்டை முன்னேற்ற முடியாது. அரசியலுக்குள் துறைசார் நிபுணர்கள் பிரவேசிக்க வேண்டும். அந்த வகையிலேயே நான் அரசியலுக்குள் வந்தேன். முக்கியமாக சட்ட கட்டமைப்பில் பல மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. அவற்றை முடியுமானவரை சேவையாற்றினேன்’’ என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறினார்.
போராட்ட காலத்தில் குறுகிய காலம் நிதியமைச்சராகவும் அலி சப்ரி நியமிக்கப்பட்டதுடன் அவர் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளருடன் வொஷிங்டனுக்கு விஜயம் செய்து அங்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தார்.
‘‘எனது பரிந்துரையின் பேரிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி ஆளுனராக நந்தலால் வீரசிங்கவையும் நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவையும் நியமித்தார். பின்னர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை தொடர்ந்து வைத்துக் கொண்டார். அவர்களை வைத்துக் கொண்டு நான் வொஷிங்டன் விஜயம் செய்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தினேன்’’ என்றும் அலி சப்ரி வீரகேசரிக்கு சுட்டிக்காட்டினார்.
இது இவ்வாறிருக்க கடந்த இரண்டு வாரங்களாக அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராக பணியாற்றினார். அதன்போது தான் பல்வேறு முக்கியமான விடயங்களை மேற்கொண்டதாக அலி சப்ரி கூறுகிறார்.
‘‘அரகலயின் பின்னர் நான் வீட்டுக்கு சென்று விட்டேன். ஆனால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு குழுவினரை எனது வீட்டுக்கு அனுப்பி இக்கட்டான நிலையில் நாட்டுக்காக வெளிவிவாகர அமைச்சு பதவியை ஏற்குமாறு கோரினார். அவரது கோரிக்கையை ஏற்ற நான் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றினேன். பின்னர் அது ஒரு சரியான முடிவு என்பதை நான் உணர்ந்தேன்’’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அரசியலில் கிடைக்கின்ற சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
“நாட்டில் ஊழல்களை கட்டுப்படுத்துவதுடன் செயற்திறனையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க வேண்டும். சவாலான காலப் பகுதியில் முக்கிய பொறுப்புக்களை ஏற்று நான் நாட்டுக்கு சேவையாற்றியிருக்கின்றேன். சவாலான காலப் பகுதியில் ஆற்றிய சேவைக்காக நான் திருப்தியுடனேயே வெளியேறுகிறேன். என்னுடைய முன்னைய சட்டத்தரணி தொழிலை மீண்டும் தொடங்கியதை நன்றாக உணர்கிறேன்’’ என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டு அரசியலுக்கு பிரவேசிப்பதற்கு முன்னதாக அலி சப்ரி சட்டத்துறையின் மிக பிரபலமாக விளங்கியவர். தற்போது மீண்டும் தனது முன்னைய தொழிலுக்குள் பிரவேசித்திருக்கிறார்.