முன்பிருந்த ஜனாதிபதிகளின் இராஜதந்திரத்தை பின்பற்றும் அநுரகுமார: முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திகதி நிர்ணயிக்கப்படாத போதிலும் ஜனாதிபதியின் முதலாவது வெளிநாட்டு விஜயம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார் திசாநாயக்க வெற்றிபெற்று இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், ஜனாதிபதி தலைமையில் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அநுரகுமார திசாநயக்கவிற்கு வெளிநாட்டு தலைவர்களும், இராஜதந்திருகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் முதல் இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இலங்கை வரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.
குறிப்பாக இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் அதன் எதிர்கால பாதை குறித்தும் ஜெய்சங்கர் விவாதிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விஜயத்தின் போது இந்தியா வருமாறு ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் இலங்கைக் குடியரசின் ஒவ்வொரு அரச தலைவர்களும் இந்தியாவிற்கே தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
அந்தப் பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமாரவும் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.