தமிழரின் பாராளுமன்ற ஆசனங்கள் குறைவதற்கு இடமளிக்கக் கூடாது
யாழ்ப்பாணத்தில், தமிழ் கட்சிகள், தமக்குள் கசப்பை வளர்த்து, ஒற்றுமையின்றி, பிளவுபட்டு, தமிழ் மக்களுக்கான பாராளுமன்ற ஆசனங்கள் குறைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. கட்சி அரசியல் மக்களுடைய வாழ்வுரிமை சார் உரிமையை பாதித்துவிடக்கூடாது என யாழ் மாவட்ட சர்வ மத பேரவை வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான யாழ் மாவட்ட சர்வ மத பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ் மக்கள் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இயல்பாக வாழ்வுரிமையுடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதை யாழ் மாவட்ட சர்வ மத பேரவையாக வலியுறுத்துகிறோம். எந்தவிதமான ஏமாற்றங்களுக்கோ, போலித்தனங்களுக்கோ இடங்கொடுக்கக்கூடாது. தமிழரின் அபிலாசைகளை நிறைவேற்ற, வரலாற்றை மீளநோக்கி, நீண்டகால, பேண்தகு நோக்கில் மக்களுடைய மேம்பாட்டுக்காக, வாக்களிக்கும் கடமையை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.
நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, சுதந்திரமான வாழ்வுக்கான ஏக்கம் அனைவருடைய இதயங்களிலும் உள்ளது. இனம், மதம், மொழி,அடிப்படையில் எந்த ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் இடமில்லை. ஊழலற்ற, ஏற்றத்தாழ்வற்ற, நீதியான, சமத்துவமான வாழ்வுக்கான போராட்டம் இன்றும் தொடர்கிறது. இதற்கு தமிழ் மக்கள், அவர்களுக்கே உரித்தான வரலாற்றுக் கடமையை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
யாழ் மாவட்ட தமிழ் மக்களுக்கான பாராளுமன்ற ஆசனங்கள் ஏழிலிருந்து ஆறாக குறைந்துள்ளமை அனைவரும் அறிந்ததே. யாழ்ப்பாணத்தில், தமிழ் கட்சிகள், தமக்குள் கசப்பை வளர்த்து, ஒற்றுமையின்றி, பிளவுபட்டு, தமிழ் மக்களுக்கான பாராளுமன்ற ஆசனங்கள் குறைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. கட்சி அரசியல் மக்களுடைய வாழ்வுரிமை சார் உரிமையை பாதித்துவிடக்கூடாது.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவை நோக்கி, எவரும் திசை தெரியாதவர்களாகி விடக்கூடாது. காலணித்துவவாதிகளிடமிருந்து, 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர், எதிர்கொண்ட வரலாற்றையும், படிப்பினைகளையும் மனதிற்கொண்டு, ஏமாற்றங்களை கடந்து, ஆக்கபூர்வமான மாற்றங்களை நோக்கி கூட்டாக ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும்.
பிளவுபட்டு, பிரக்ஞையிழந்து, யாரும், எடுப்பார் கைப்பிள்ளையாகி விடக்கூடாது. அதனை வரலாறு ஒரு நாளும் மன்னிக்காது. மனித நேயத்துடனும் மனித மாண்புடனும், காத்திரமான எதிர்காலத்தை நோக்கி போராட வேண்டும். தமிழ் மக்களைப் போலவே முஸ்லிம் மக்களுடையதும் ஏனைய தமிழ் பேசும் மக்களுடையதும் அபிலாசைகளும் வாழ்வுரிமைகளும் மதிக்கப்படவேண்டுமேன வலியுறுத்துகிறோம்.
நவம்பர் 14 இல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல் மூலம் தமிழ் மக்களுடைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுவதோடு, பொருத்தமான தூரநோக்கும், மக்கள் பணிக்கான அர்ப்பணிப்பும், மிக்க இளைய தலைமுறையை காத்திரமான அரசியல் தலைவர்களாக்க வேண்டும். அனுபவம் மிக்க அரசியல் தலைவர்கள் ஆலோசனைகளை பொதுவெளியில் பகிர்ந்து, ஆளுமைமிக்க அரசியல் சமூகத்தை உருவாக்கட்டும்.
தமிழ் மக்களைப் போலவே தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுடைய வாழ்வுரிiயையும் நாம் மதிக்கிறோம். அவர்களுடைய வாழ்வும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.