மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயர் மாற்றம்?: நோயாளர்களும் ஆபத்தில்
கொழும்பு பொரள்ளையில் உள்ள வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்தில் நடத்தப்படும் விசேட பரிசோதனைகள் கணிசமான காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அதிகாரிகள் அதனைக் கவனத்தில் கொள்ளாமல் பெருமளவு பணத்தைச் செலவிட்டு, வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயரை மாற்றுவதற்கான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வினைப்பொருட்கள் இல்லாத காரணத்தால் பல அத்தியாவசிய பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சில நோயாளிகள் சிகிச்சையைத் தொடர முடியாது என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் துறையினரால் சிகிச்சை பெற முடியாத சில நோயாளிகளின் வாழ்க்கை தற்போது மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்திற்கு அனுப்பப்பட்ட நோயாளர்களின் மாதிரிகளுக்கு என்ன நடக்கிறது என்பதை கண்டறிய முடியாதுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் “லங்காசார“ சிங்கள ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு கடுமையாக சீர்குலைந்தமையே இதற்கான காரணம் என அந்த வைத்தியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் நிறுவப்பட்டு 125 வருடங்கள் கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் பிரபலமான இந்தப் பெயரை ஏன் மாற்ற வேண்டும் என்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.