ஈஸ்டர் தாக்குதல்; விசாரணை அறிக்கை காணாமற் எவ்வாறு போனது ?
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (PCoI) அறிக்கை காணாமற் போனமை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ்தளத்தில் சம்பவம் குறித்து இன்று வியாழக்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்தின் சனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமற் போயுள்ளதாக கொழும்பு உயர்மறைமாவட்டத்திற்கான தொடர்பாடல் பணிப்பாளர் சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பெற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதாகவும், தற்போது அந்த அறிக்கை காணாமல் போயுள்ளதாகவும் சிறில் காமினி தெரிவிதிருந்தார்.
அவரது ஆதாரங்களின்படி, தாக்குதல் தொடர்பான உண்மையான ஆதாரங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்களை அறிக்கை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
புதிய அரசாங்கத்தினால் உரிய விசாரணை நடத்தப்பட்டால் பல அரசியல்வாதிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தலைவரான சஹ்ரானுடன் தொடர்பு கொண்டிருந்த ‘அபுஹிந்த்’ 2019 ஆம் ஆண்டு தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய நபர் என்பதையும் சிறில் பெர்னாண்டோ எடுத்துரைத்திருந்தார்.
மேலும், பொது பாதுகாப்பு அமைச்சின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர் ரவி செனவிரத்னவுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சில தகவல்கள் தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.