தேர்தல் அச்சமே அவதூறுகள் எம்மை நோக்கி வர காரணம்
தோற்றுப்போவோம் என்ற அச்சமும் கழ்ப்புணர்ச்சியுமே மீண்டும் எம்மீதான அவதூறுகளை இதர தமிழ் அரசியல் தரப்பினர் கையில் எடுத்து பூச முற்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கூட்டம் கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து மேலும் பேசுகையில்:
எமது வழிநடத்தலும் அதனை முன்னெடுத்துச் செல்லும் பொறிமுறையும் சரியானது என கடந்த காலங்களில் மக்கள் எமது பாதையை நோக்கி அணிதிரளத் தொடங்கினர். இதனை கண்டு அச்சமுற்ற தரப்பினர் அரசியல் ரீதியில் நேருக்கு நேர் நின்று வெற்றிகொள்ள முடியாதுபோன காரணத்தால் எம்மை தோற்கடிப்பதற்காக பல்வேறு அவதூறுகளையும் சேறுபூசல்களையும் வாரி இறைத்தனர்.
அத்தகையவர்களது குறித்த செயற்பாடுகளால் தோற்கடிக்கப்பட்டது எமது மக்களும் மக்களது அபிலாசைகளுமே தவிர நாமல்ல.
நாம் என்றும் தனித்துவத்துடன் தடம்மாறாத கொள்ககையுடன் எமது செயற்பாடுகளை மக்களிடம் கொண்டுசென்று வருகின்றோம்.
அதனால்தான் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் மக்கள் என்னை தமது பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு தொடர்ச்சியாக அனுப்பி வருகின்றனர்.
இதேநேரம் தமிழ் மக்களிடம் நீண்டகாலமாக எமக்கு அதிகளாவான நாடாளுமன்ற அரசியல் அதிகாரங்களை தருமாறும் அவ்வாறு கிடைக்கப்பெற்றால் நிச்சயமாக தமிழ் மக்களின் அபிலாசைகள் அனைத்தும் ஈடேறும் என்றும் கூறிவருகின்றேன். ஆனாலும் இதுவரை அந்த அரசியல் பலத்தை தமிழ் மக்கள் எம்மை நோக்கி தரவில்லை என்பது கவலையான விடயம்.
இலங்கை மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமென நீண்டகாலமாக முயற்சித்து வந்தனர். தற்போது அரசியல் அதிகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதேபோன்று தமிழர் தேசப்பரப்பில் இற்றைநாள்வரை புரையோடிப்போயுள்ள போலித் தேசியத்துக்கும் சுயநல அரசியல் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து மாற்றத்தை கொண்டுவர தமிழ் மக்கள் நினைக்கின்றனர்.
அந்தவகையில் தமிழ் அரசியல் பரப்பில் மாற்றத்தை கொண்டுவர மக்கள் தற்போது முயற்சிக்கின்றனர். அந்த மாற்றம் எம்மை நோக்கியதாக இருப்பதை கண்டு அச்சமுற்றுள்ள இதர சுயநல தமிழ் அரசியல் தரப்பினரும் சில இலத்திரனியல் சமூக ஊடகங்களும் மீண்டும் எம்மை நோக்கி தவறான பிரசாரங்களையும் சேறடிப்பகளையும் மேற்கொள்ள முயற்சிக்கின்றனர் என்றார்.