இலங்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் எதுவும் இந்த அரசாங்கத்துக்கு ஒருபோதும் இல்லை;  அதனால்தான் தெரிவுக் குழுவிலிருந்து விலகினோம்

அரசாங்கத்திற்கு உண்மையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களை அமைத்துத் தேர்தலை ஒத்திவைக்கவே முயற்சித்து வருகிறது என்று குற்றம் சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இதன் காரணமாகவே தாம் அதிலிருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பிக்குகளின் ஊர்வலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு அளிப்பதாகத் தெரியவில்லையே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்:

ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள பாதயாத்திரையை அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது. இந்தப் பாதயாத்திரையானது மகா சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும்.

நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். துறவறம் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை சமயத் தலைவர்களுக்கே உரியதாகும். சீவரத்தைக் களையும் அதிகாரம் சமயத் தலைவர்களுக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை மீறும் நிலையை எட்டியுள்ளது.

கடந்த 76 ஆண்டுகால வரலாற்றில் பௌத்த துறவி ஒருவருக்கு எதிராகப் பேசுவதற்கு எவரும் முற்பட்டதில்லை. ஆனால் இன்று அந்த கௌரவம் சீர்குலைக்கப்பட்டு, சமூக ஊடகங்கள் மூலம் மகா சங்கத்தினருக்கு அவதூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கம் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

எங்களது ஆட்சிக் காலத்தில் அனைத்து மதங்களையும் பின்பற்றுவதற்கான சுதந்திரம் முழுமையாகக் காணப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச நாட்டில் அனைத்து மதங்களுக்குமான நிலையங்களை உருவாக்கினார். ஆனால் இன்றைய அரசாங்கம் அனைத்து மதங்களையும் பாதுகாப்பதற்குப் பதிலாக, மதச்சார்பற்ற கொள்கையைத் திணித்து வருகிறது. இந்நாட்டில் உள்ள அனைத்து மதங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி என்ற ரீதியில் இதனை நீக்குமாறு உத்தரவொன்றைப் பிறப்பித்திருக்க முடியும். புதிய சட்டம் உருவாக்கப்படும் வரை அவ்வாறு உத்தரவிட அவருக்கு அதிகாரம் உள்ளது.

இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதற்கே அரசாங்கம் முயற்சி செய்கிறது. எனினும், இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர். சிறுபான்மையினர் அரசாங்கத்தின் வலையில் விழமாட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்குச் சட்டத்தின் மூலம் காணப்பட்ட அதிகாரத்திற்கமையவே ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார். அந்த விடுதலையின் போது சட்டரீதியாக ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பின், அதனைச் சரிசெய்வதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் அதனைச் செய்யாமல் ஞானசார தேரரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நாட்டில் மதத்தை மையமாகக் கொண்டு அரசியல் செய்த கட்சிகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை. இன்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி ) அதனையே செய்ய முயல்கிறது. பாராளுமன்றத் தெரிவுக் குழுக்களை அமைத்து மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *