இஸ்ரேலை இரும்பு கவசம் கொண்டு அமெரிக்கா பாதுகாக்கும் – ஜோ பைடன் உறுதி
இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதுப்பற்றி தெரியவந்ததும் உடனடியாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க ராணுவத்துக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார்.
அதன் பின்னர் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜோ பைடன் ஈரானின் தாக்குதல் குறித்து கூறுகையில், \”எனது வழிகாட்டுதலின்படி, அமெரிக்க ராணுவம் இஸ்ரேலின் பாதுகாப்பை தீவிரமாக ஆதரித்தது.
எனக்கு தெரிந்தவரை ஈரானின் இந்த தாக்குதல் தோற்கடிக்கப்பட்டதாகவும், பயனற்றதாகவும் தோன்றுகிறது, இது இஸ்ரேலிய ராணுவ திறனுக்கும், இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான ராணுவ ஒத்துழைப்புக்கும் ஒரு சான்றாகும். ஈரான் மீண்டும் இந்த தவறை செய்யக் கூடாது. ஏனெனில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக உள்ளது\” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ஜோ பைடன் தனது எக்ஸ் வலைதளத்தில், \”இன்று காலை, இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலைப் பற்றி விவாதிக்கவும், புதிய தடைகள் உட்பட இந்தத் தாக்குதலுக்கான பதிலை ஒருங்கிணைக்கவும் ஜி7 தலைவர்களுக்கு நான் அழைப்பு விடுத்தேன். இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்\” என்று பதிவிட்டுள்ளார்.