ஹம்பாந்தோட்டையில் ஏற்பட்ட தோல்வி: குருநாகல் மாவட்டதை குறிவைக்கும் நாமல்
எதிர்வரும் பொது தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கட்சியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றிருந்தார். இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணி கட்சிகள் அனைத்தும் தேர்தலை எதிர்கொள்ள வியூகங்களை வகுத்து வருகின்றன.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் நகர்வுகளை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ச இம்முறை குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமல் ராஜபக்சவிற்கு கிடைத்த வாக்குகளை அடிப்படையாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
எனினும், குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமான உறுப்பினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இருந்து வருகின்றார்.
இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் இந்த திடீர் முடிவால் அவர்கள் இருவரும் அந்த மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒரேயொரு தேசியப்பட்டியல் உறுப்பினர் ஆசனத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ளும் திறன் பெற்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் எந்த மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு நேரடியாக ஆசனம் கிடைக்காது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.