இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதல்: இலங்கையர்களின் நிலை குறித்து வெளியான தகவல்
இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை பிரஜைகள் எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களின் மத்தியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரானால் ஆதரிக்கப்படும் பல்வேறு போராளிக் குழுக்களிடமிருந்து இஸ்ரேல் அடிக்கடி ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நேற்றிரவு கடும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. தலைநகர் டெல் அவில் மீது சுமார் 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியப் படைகள் களமிறங்கியதுடன், பல ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை முடிவுக்குகொண்டு வந்துள்ளதாக ஈரான் இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.