ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் ருவான் விஜேவர்தன?: ரணில் தரப்பில் சிக்கல்
ருவான் விஜேவர்தன, நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தற்போது கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வருண ராஜபக்ச மற்றும் யட்டிநுவர ஐக்கிய தேசியக் கட்சி ஆசன ஒருங்கிணைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்ததன் மூலம் கட்சியின் உள்ளே காணப்படக்கூடிய சர்ச்சைகள் வெளிவந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்டர்கள் பலர் கட்சியை விட்டு விலகி சஜித் பிரேமதாசவுடன் இணைய தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சஜித் மற்றும் ரணிலின் இணக்கம் தொடர்பில் எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாத நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியில் இந்த நிலை உருவாகியுள்ளது.
தனக்கு பிரதமர் பதவி மட்டுமல்ல அமைக்கப்படும் புதிய கூட்டணியின் தலைமை பதவி வேண்டும் எனவும், ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீங்க வேண்டும் எனவும், அமைக்கப்படும் கூட்டணியின் பொதுச் செயலாளரை நியமிக்கும் பொறுப்பு தனக்கு வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தமையால் சஜித் மற்றும் ரணில் இணைவது ஒருபோதும் இடம்பெறாத ஒரு சம்பவம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரணில் தரப்பில் அடுத்த அரசியல் நகர்வு என்ன என்பதை தீரமானிக்கும் கலந்துரையாடல் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிய மற்றும் ஏனைய அரசியல் குழுக்களுடன் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.