நமக்குள் சண்டை, சச்சரவு வேண்டாம்: கட்சியினருக்கு பிரிட்டன் முன்னாள் பிரதமர் அழைப்பு
‘கட்சியில் நமக்குள் சண்டை வேண்டாம், ஒற்றுமையாய் இருந்து அடுத்த கட்டம் நோக்கி செல்வோம் வாருங்கள்,’ என கட்சியினருக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிஷி சுனக் அழைப்பு விடுத்தார்.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், பர்மிங்காமில் நடந்த, கன்சர்வேட்டிவ் கட்சியின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொண்டார். எதிர்கட்சி தலைவராக தனது கடைசி உரை நிகழ்த்தினார்.
பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி, ஜூலை மாதம் நடந்த பொதுதேர்தலில், படுதோல்வியை சந்தித்தது. இதனால் பதவி இழந்தரிஷி சுனக் மாநாட்டில் பேசியதாவது:
கட்சியில் நமக்குள் இருந்த சண்டையை நிறுத்தி, அடுத்து வரும் தலைவர்களுக்கு பின்னால் இருந்து, ஒன்றுபட்டு வெற்றி கொள்வோம் வாருங்கள், அதுதான் எதிர்கால நம்பிக்கையின் அடித்தளம்.
நமக்குள் பிரிவினை, சண்டை சச்சரவுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பழைய வெறுப்புகளை வளர்த்துக் கொள்ளாமல், புதிய நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் எங்கு இருக்க முடியும் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட, நம்மை ஒன்றிணைப்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.இவ்வாறு ரிஷி சுனக் பேசினார்.