திருகோணமலை, வெல்வேரி கிராமத்தில் காணி அபகரிப்பு!
திருகோணமலை, வெல்வேரி கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள 31 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 42 ஏக்கர் காணிகள் இதுவரை அரசாங்கத்தினால் விடுவிக்கப்படாத நிலையில், தற்போது தனி நபர் ஒருவருக்கு குறித்த காணிகள் குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த குறித்த கிராமத்தவர்கள் மீளக் குடியேற பல தடவைகள் நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும், இந்த காணிகள் விடுவிக்கப்படாமல் இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக அப்பகுதியில் வசித்த மக்களின் வீடுகள் காணப்பட்ட பகுதிகளில், இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தமையினாலும், வனஜீவராசிகள் திணைக்களம் குறித்த பகுதியில் எல்லையிட்டமையினாலும் அங்கு மீளக் குடியேற முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அப் பகுதியானது தற்போது வனாந்தரமாக காட்சியளிப்பதாகவும், எல்லையிடப்பட்ட பகுதிகள் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் காணி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் இந்த விடயம் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவிடம் தற்போது முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீது தாம் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தமது பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி தகுந்த தீர்வினை அவர் பெற்றுத்தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது