இந்திய இலங்கை இணைப்பு திட்டங்களை மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம்; பொதுத்தேர்தலின் பின்னர் இறுதி முடிவு
அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டம் உட்பட அனைத்து இந்திய இலங்கை இணைப்பு திட்டங்கள் குறித்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீள ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கில் அதானி குழுமத்தின் மின்சக்தி திட்டம் உட்பட இந்தியாவுடன் இலங்கையை இணைக்கும் அனைத்து திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொதுத்தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்றம் அமைந்ததும் இந்தியாவுடனான திட்டங்கள் குறித்து அரசாங்கம் இறுதிமுடிவை எடுக்கும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவுடனான இணைப்பு திட்டங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன அந்த திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த மதிப்பீடுகளி;ற்காக இந்த மறு ஆய்வு இடம்பெறுகின்றது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதுத்தேர்தலின் பின்னரே அவற்றை தொடர்ந்து எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து தீர்மானிப்போம்,என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் தொடர்ந்தும் அந்த திட்டங்களை முன்னெடுப்பதா அல்லது ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்வதா? அல்லது நாங்கள் முன்வைக்கும் விடயங்களுடன் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா என்பதை தீர்மானிப்போம் என குறிப்பிட்டுள்ளன.
பொதுத்தேர்தலிற்கு முன்னர் எந்த தீர்மானத்தையும் எடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.