உலகம்

தரைவழி தாக்குதல் தொடக்கம்; ஹிஸ்புல்லாவின் சுரங்கத்திற்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள்

பெய்ரூட்பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது சுமார் ஓர் ஆண்டு காலமாக போர் தொடுத்து வரும் இஸ்ரேலுக்கு, லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் பெரும் தலைவலியாக இருந்து வருகின்றனர். போர் தொடங்கிய நாளில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனானில் அவ்வப்போது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்த சூழலில் இந்த மாத தொடக்கத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் தீவிரமாக இறங்கியது.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே சமயத்தில் வெடித்தன. அதற்கு அடுத்த நாள் நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இந்த இரு சம்பவங்களில் மொத்தமாக 39 பேர் பலியாகினர். மேலும் 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேலுக்கு நேரடியாக பொறுப்பேற்கவில்லை என்றபோதிலும் இஸ்ரேல்தான் இந்த தாக்குதல்களை நடத்தியது என பரவலாக நம்பப்படுகிறது.

இதற்கு பழிதீர்க்கும் விதமாக ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் கடந்த 23-ந் தேதி லெபனான் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிபயங்கரமான வான்வழி தாக்குதலை தொடங்கியது. தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் உள்பட ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதை ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதி செய்ததுள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு இருதரப்பும் பரஸ்பர தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தின.

இந்த நிலையில், லெபனான் மீது தரைவழித்தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் சுரங்கத்திற்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்துள்ளன. தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ள இடங்களை இலக்காக கொண்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.