தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதமளிக்க மாட்டேன்: சஜித் தீர்மானம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் பங்காளிக் கட்சிகள், தேர்தலுக்கு முன்னரே கோரும் தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதமளிக்காதிருக்க கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இந்த கட்சிகள் கணிசமான வாக்குகளை பெற்றால் தேசியப்பட்டியல் ஆசனங்களை கோரும் என்பதுடன் அதற்கு முன்னரே அதற்கான உத்தரவாதத்தை கோரும் ஒப்பந்தங்களை கைச்சாத்திட கோரிக்கை விடுக்கும் என்பதால், தேர்தலுக்கு முன்னர் அவற்றுக்கான இணக்கப்பாடுகளை வெளியிடாதிருக்க சஜித் தீர்மானித்துள்ளதாக மேலும் தெரியவந்தது.
சஜித்தின் இந்த தீர்மானத்தால் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் தடுமாற்றமடைந் திருப்பதாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் சஜித்துடன் பேச்சு நடத்தி இறுதித் தீர்மானத்தை எடுக்கவும் அக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதேவேளை, பொதுத் தேர்தலில் தோல்வியடையும் எவருக்கும் தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கக்கூடாதென சஜித் பிரேமதாசவிடம் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.