ஒவ்வொரு குழந்தையையும் சமமாகப் பாதுகாத்து நடத்துங்கள்: இன்று சிறுவர் தினம்
2024 ஆம் ஆண்டு உலகளாவிய சிறுவர்கள் தினத்தின் கருப்பொருள் “ஒவ்வொரு குழந்தையையும் சமமாகப் பாதுகாத்து நடத்துங்கள்.” ஒவ்வொரு குழந்தையும், இனம், மதம், அல்லது தோல் நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், சமமான அக்கறையுடனும் பாதுகாப்புடனும் நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தத் கருப்பொருள் வலியுறுத்துகிறது.
உலகளாவிய ரீதியில் சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் அவர்களுக்கென்று ஒரு தினமும் வகுக்கப்பட்டு இந்த சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில் 1954ஆம் ஆண்டில் சிறுவர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை ஐ.நா வலியுறுத்தியது.
18வயதிற்குக் குறைந்த சகலரும் சிறுவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி சர்வதேச ரீதியில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமை பிரகடனத்தில் 1991ம் ஆண்டு இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.
உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்றிலொரு பகுதியினர் சிறுவர்களாக காணப்படுகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
சிறுவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்க்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே சிறுவர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறுவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டங்களின் பங்கினை மறுப்பதற்கில்லை.
இந்த ஆண்டும் விசேட விதமாக யுனிசெப் சிறுவர் பாதுகாப்பை கருத்திற்கொண்டு #ForEveryChild, #EveryRight! 4என்ற ஹேஸ் டேக்குகளை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றது.
ஒரு நாட்டில் சிறுவர் பாதுகாப்பு என்பதையும் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் சிறுவர்கள் பாதுகாக்கப்படவும் அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படவும் வேண்டும் என்பதை மறக்க கூடாது.