அமெரிக்காவைத் தாக்கிய ஹெலீன் சூறாவளி: 43 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ஹெலீன் (Helene) எனப்படும் சூறாவளியினால் 43 பேர் உயிரிழந்துள்ளதோடு,பலர் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.
புளோரிடாவில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி இதுவாகும்.
வியாழக்கிழமை ஒரே இரவில் மண்சரிவை ஏற்படுத்திய பின்னர் ஜோர்ஜியா மற்றும் கரோலினாவுக்கு வடக்கே நகர்ந்து சென்றுள்ளது.
ஹெலீன் சூறாவளி தற்சமயம் வலுவிழந்திருந்தாலும் அதிக காற்று, வெள்ளம் மற்றும் சூறாவளி அச்சுறுத்தல் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை வீதிகள் மற்றும் வீடுகள் ஆகியன நீரில் மூழ்கின.
இந்தப் புயலின் காரணமான நிதி நிறுவனங்கள் சந்தித்திருக்கும் இழப்பீடு பில்லியன் டொலர்கள் இருக்கலாம் என காப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவை ஏற்படுத்திய பின்னர் ஆறு மணிநேரம் சூறாவளியின் தாக்கம் இருந்தது என கூட்டாட்சி அவசரகால மேலாண்மை முகமை (Federal Emergency Management Agency – FEMA) தெரிவித்துள்ளது.
தேசிய சூறாவளி மையம் (National Hurricane Center – NHC)யின் கூற்றுப்படி, சூறாவளி தாக்கம் கரையை நோக்கி வீசியதால் புளோரிடா கடற்கரையின் சில பகுதிகளில் தரை மட்டத்திலிருந்து 15 அடி உயரத்தை தண்ணீர் எட்டியுள்ளது.
தொடர்ந்தும் வெள்ளம், நிலச்சரிவு அபாயம், அதிக மழை போன்ற ஆபத்துக்கள் இருப்பதாக தேசிய சூறாவளி மையம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய மிகவும் சக்தி வாய்ந்த 14ஆவது சூறாவளி இதுவாகும்.
நேற்று வெள்ளிக்கிழமை புளோரிடாவில் 8 பேர் மற்றும் பினெல்லாஸில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீதியில் வைக்கப்பட்டுள்ள பலகை கார் மீது விழுந்ததில் ஒருவரும் வீட்டின் கூரையில் மரம் விழுந்ததில் இன்னொருவரும் உயிரிழந்ததாக புளோரிடா ஆளுநர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.