ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை இலக்கு வைத்து தாக்குதல்: மோதல் முழுவீச்சில் தொடரும்
இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது. காஸாவின் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தற்சமயம் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறிய இஸ்ரேல் மக்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்த தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக லெபனானின் தெற்குப் பகுதியிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த வாரங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் சுமார் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இவ்வாறிருக்க நேற்று வெள்ளிக்கிழமை லெபனானின் பெய்ரூட்டில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலகத்தின் மீது பயங்கரமான வான் வழித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலிலன் இத் தாக்குதலில் குறித்த அலுவலகக் கட்டிடம் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் ஹஸ்ரல்லாவைக் குறி வைத்தே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 91 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞசமின் நெதன்யாகு, “ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல் முழுவீச்சில் தொடரும்“ எனக் கூறியுள்ளார்.
அவர் இவ்வாறு கூறிய உடனேயே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் காரணமாக இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையில் நேரடி போர் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.