இந்த அரசு கவிழ வேண்டுமென எவருமே நினைக்கக் கூடாது
தற்போதைய அரசாங்கம் வீழ்ந்துவிட வேண்டும் என்று எவரும் நினைக்கக் கூடாது என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கத்திற்கு ஒத்தழைப்பு வழங்காமையினால் இந்த அரசாங்கம் வீழ்ந்து விட வேண்டும் என்று எவரும் நினைக்கக் கூடாது. கோதாபய ராஜபக்ஷ அரசாங்கம் வீழ்ந்த போது, அரசாங்கம் மட்டுமன்றி நாடும் வீழ்ந்தது. இதனால் அரசாங்கம் எங்களுடையது இல்லையென்றாலும் நாடு எங்களுடையது. இதனால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதிக்கு சவால்களை வெற்றிக்கொள்ள முடியுமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.
இதேவேளை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கான உரையில் தன்னை நம்பாதவர்களின் நம்பிக்கையையும் தனது செயற்பாட்டின் மூலம் வெற்றிக்கொள்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவரால் மேற்கொள்ளப்பட்ட மூன்று நியமனங்களில் இரண்டு நியமனங்கள் நாம்பிக்கையை இல்லாது செய்யலாம். ஜனாதிபதி செயலாளர் நியமனத்தில் தனது பல்கலைக்கழக தோழரான அதிகாரியொருவரையே நியமித்துள்ளார். ஜனாதிபதிக்கு அரச இயந்திரம் தொடர்பில் கூறக்கூடியவராக அந்தப் பதவிக்கு வருபவர் இருக்க வேண்டும்.
இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர், தன்னை பொலிஸ் விசாரணையில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்து அதனை தடுக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தவரே நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கடந்த அரசாங்கத்தில் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தற்போது காலிமுகத்திடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகன கண்காட்சி நடத்தப்படுவது அதிசயமல்ல.
1994இல் சந்திரிகா ஜனாதிபதியான போதும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான போதும் இவ்வாறு வாகன கண்காட்சி நடத்தப்பட்டது. இதற்கு முன்னர் இவ்வாறாக வாகன கண்காட்சியை நடத்திய அரசாங்கங்களுக்கு நடந்ததை நினைக்கும் போது இந்த அரசாங்கத்திற்கும் நடந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.