தேர்தலில் பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம்; TISLக்கு 1126 முறைப்பாடுகள்
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெற்று நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் இலங்கை (TISL) நிறுவனத்திற்கு 1126 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனை, அந்நிறுவனத்தின் பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கும் வேலைத்திட்டத்தின் தேசிய இணைப்பாளர் சட்டத்தரணி துஷானி கந்தில்பான தெரிவித்துள்ளார்.
அவற்றுள், 650 முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது மைதானங்கள், அரசு அலுவலகங்கள், கட்டடங்கள், பாடசாலைகள் போன்ற பொது வளாகங்களை தவறாக பயன்படுத்தியது குறித்து மட்டும் 451 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் பல காரணிகளால் விசேடமாக அமைந்ததாகவும் 2022ஆம் ஆண்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் பின்னர் இடம்பெற்ற முதலாவது தேர்தல் என்பதும் 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வேட்பாளர்களின் பிரச்சார செலவுகள் தொடர்பில் ஆராயப்பட்ட முதல் தேர்தல் இது என்பது அவையாகும்.
வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை கணக்கெடுத்தமையும் விசேட நிகழ்வு என அவர் தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் சுமூகமாக மற்றும் அதிகளவிலான வாக்கு வீதத்தில் நிறைவடைந்தமை பாராட்டத்தக்கது எனவும் அது தொடர்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு, ஸ்ரீலங்கா பொலிஸ் மற்றும் அனைத்து அரச சேவை வழங்குநர்களுக்கு பாராட்டை தெரிவிப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
பிரச்சார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் ஆராய்வதற்காக TISL நிறுவனம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் 202 பேரை அனைத்து மாவட்டங்களிலும் நியமித்திருந்ததாகவும் தேர்தல் செலவினங்களை அறிக்கையிட மேலும் 47 கண்காணிப்பாளர்களை நியமித்தாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, TISL நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட கண்காணிப்பாளர்கள் 244 பேரை தேர்தல் இடம்பெறும் தினத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் வெளிப்படுத்தினார்.
தேர்தல் தொடர்பாக கடுமையான வன்முறைச் செயல்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும், தேர்தல் தினத்தன்று TISL கண்காணிப்பாளர்கள் 112 தேர்தல் சட்டங்களை மீறிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இவற்றில் பெரும்பாலானவை சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள், சுவரொட்டிகள், பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற சட்ட விரோதச் செயல்கள் குறித்து பொலிஸ் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் புகார் அளித்ததையடுத்து, அவற்றை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்ததாக தேசிய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.