பதவிகளில் முழுமை பெறாத ரணிலின் அரசியல் வாழ்க்கை; இத்துடன் நிறைவுபெறுமா?
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன போட்டியாளராக முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2,299,767 வாக்குகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றிருந்தன. அது 17.2 வீதம் ஆகும்.
நாட்டின் கடினமான நிலையில் சவாலான பதவியை ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு கையிருப்புக்கிடையே வெற்றிகரமாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தமிட்டு 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் பொருளாதாரத்தை சீராக்குவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டவராக கருதப்படுகிறார்.
எனினும், ரணில் விக்கிரமசிங்கவால் எந்தவொரு மாவட்டத்திலும் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை.
யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தபால்மூல வாக்கெடுப்புகளில் அவர் முதன்மை இடத்தை பெற்றார்.
அதனடிப்படையில், மக்கள் விருப்புகளால் ஆட்சிக்கு வருகை தராத ரணில் விக்கிரமசிங்க இம்முறையும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.
ரணிலின் அரசியல் பயணத்தில் அவர் வகித்திருந்த பதவிகள் எதனையும் முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவி மாத்திரமே நீடித்திருக்கிறது.
69 இலட்ச வாக்காளர்களின் விருப்பத்தால் ஜனாதிபதியான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் எவராலும் முடியாது என பின்வாங்கியிருந்த தருணத்தில் தன்னால் முடியும் என முன்வந்த ரணில் விக்கிரமசிங்க மக்கள் தீர்வுக்கு முன் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
முழுமை பெறாத ரணிலின் பதவிகள்
ரணில் விக்கிரமசிங்க 1993-1994, 2001-2004, 2015-2018, 2018-2019, 2022 காலப்பகுதிகளில் ஐந்து தடவைகள் பிரதமராக பதவி வகித்திருந்தார்.
எனினும், குறித்த பதவிக் காலங்கள் எதுவும் குறைந்தது நான்கு வருடங்கள் முழுமையடையும் வரையில் அவரால் பதவி வகிக்க முடிந்திருக்கவில்லை.
அரசியலில் இராஜதந்திரி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ரணில் இத்துடன் மூன்று தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மூன்று தடவைகளும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அப்போது இலங்கையின் வயதில் குறைந்த அமைச்சர் என்ற பெயரைப் பெற்றிருந்த அவர் இன்று வரையிலும் தனது சிறந்த ஆட்சியை நிலைநாட்ட போராடியவராகவே காணப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும் அவருடைய ஜனாதிபதிப் பதவிக்குரிய கனவு ஆகக் குறைந்தது இரண்டு வருடங்கள் நீடித்திருந்தமை ஓரளவுக்கு ஆறுதலானது என்ற சிறிய மகிழ்ச்சியுடன் அவர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தனது சொந்த இல்லத்துக்குத் திரும்பியுள்ளார்.
2022 ஜூலை மாதம் 21 ஆம் திகதியில் இருந்து 2024 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 21 ஆம் திகதி வரை அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் தீர்மானமிக்க மக்கள் வாக்குகள் மாற்றத்திற்காய் அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (23) ஜனாதிபதி அரியாசனத்தில் அமர்த்தியுள்ளது.