சைக்கிளில் உலகை சுற்றி வந்து அமெரிக்கப் பெண் சாதனை!
அமெரிக்கன் சைக்கிள் ஓட்டுநர் லேல் வில்காக்ஸ் (Lael Wilcox), சைக்கிளில் உலகை வேகமாக சுற்றி வந்த பெண் என்ற உலக சாதனையை முறியடித்துள்ளார்.
அவர் 18,125 மைல் ( 29,169 கி.மீ) தூர பயணத்தை 108 நாட்கள், 12 மணி நேரம் மற்றும் 12 நிமிடங்களில் நிறைவு செய்தார்.
அலாஸ்காவைச் சேர்ந்த 38 வயதான வில்காக்ஸ், மே 28 ஆம் திகதி தனது சாதனை பயணத்தை ஆரம்பித்தார்.
108 நாட்களில் நான்கு கண்டங்களில் உள்ள 21 நாடுகளைக் கடந்து புதன்கிழமை அந்நாட்டு நேரப்படி இரவு 09.00 மணியளவில் சிகாகோவுக்கு திரும்பினார்.
அவர் தனது பயணத்தில் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
தற்சமயம், அவரது சாதனை கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்படுவதற்கு சரிபார்க்கப்படுகின்றது.
முன்னதாக ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜென்னி கிரஹாமின் 2018 ஆம் ஆண்டில் 124 நாட்கள் 11 மணிநேரம் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.