பலதும் பத்தும்

அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பீர்கள்?; கருட புராணம் கூறுவது உண்மையா?

போன ஜென்மத்தில் என்னதான் பாவம் செய்தேனோ? இந்த பிறவியில் மனிதனாக பிறந்து இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன்!’ இதை கூறாத மனிதர்களே கிடையாது.

ஆனால் மனிதப் பிறவி எடுப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. முதலில் தாவரமாக பிறந்து, இரண்டாவதாக நீர்வாழ் உயிரினமாக பிறவி எடுத்து, மூன்றாவதாக ஊர்வன இனத்தில் பிறந்து, நான்காவதாக பறவையாக பிறந்து, ஐந்தாவது ஜென்மத்தில் விலங்காக பிறந்து, இப்படி ஐந்து பிறவிகளை எடுத்து பிறருக்கு உதவி செய்ததன் மூலம் தான் நம்மால் மனிதப் பிறவியை எடுக்க முடியும்.

மனித பிறவி எடுப்பது எவ்வளவு கஷ்டங்கள் இருக்கின்றது என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இப்பேர்ப்பட்ட பிறவிதான் மனிதப்பிறவி.

மனிதப் பிறவியில் நாம் செய்யும் பாவங்கள் கணக்கிடப்பட்டு தான், அடுத்த பிறவியானது நமக்கு தரப்படுகிறது என்று கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பிறவியில் என்னென்ன பாவங்கள் செய்தால், அடுத்த பிறவியில் நாம் எப்படி பிறப்போம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

* புழுக்கள் நெளியும் அசுத்தமான இடங்களில் வசிப்பவர்கள், போன ஜென்மத்தில் அடுத்தவர்கள் பொருளை திருடியவர்களாக இருந்திருப்பார்கள்.

* துர்நாற்றம் வீசும் வாய் உடையவர்கள், வாயில் புழுக்கள் உருவாகும் பிரச்சனைகளை கொண்டவர்கள், போன ஜென்மத்தில் மதுபானம் விற்றவர்கள், குடி போதைக்கு அடிமையாக இருந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

* போன ஜென்மத்தில் கொலை செய்தவன், இந்த ஜென்மத்தில் குஷ்டரோகியாக பிறந்திருப்பான். அது மட்டுமல்லாமல் உடலில் கெட்ட நீர் சேர்ந்து துர்நாற்றம் வீசும்.

* இந்த ஜென்மத்தில், கொலை செய்தால் அடுத்த ஜென்மத்தில் குஷ்டரோகியாக பிறப்பது கட்டாயம் நடக்கும்.

* பசுவை கஷ்டப்படுத்தியவர்கள், பிறர் வீட்டிற்கு தீ வைத்தவர்கள் இந்த ஜென்மத்தில் ஊமையாகவும், குஷ்டரோகியாகவும் பிறந்திருப்பார்கள்.

* போன ஜென்மத்தில் அதிகமாக பொய் பேசி அடுத்தவர்களை ஏமாற்றி இருந்தால், இந்த ஜென்மத்தில் ஊமையாக பிறந்து இருப்பார்கள்.

* போன ஜென்மத்தில் குருவுக்கு துரோகம் செய்திருந்தால், இந்த ஜென்மத்தில் விகாரமான தோற்றத்தோடு பிறவி எடுத்திருப்பார்கள்.

* ஒருமுறைகூட இறை வழிபாடு செய்யாதவர்கள், புனித தீர்த்தத்தில் நீராடமல் இருப்பவர், இப்படிப்பட்டவர்கள் ஆளில்லா காட்டில் குரங்காக பிறவி எடுப்பார்கள்.

* பல புரோகிதர்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில், ஒரு புரோகிதர் மட்டும் தவறு செய்தால் அந்த பாவம் அவரை மட்டும் போய் சேராது. அந்த இடத்தில் இருக்கும் அனைத்து புரோகிதர்களும் அடுத்த ஜென்மத்தில் கழுதையாக பிறவி எடுப்பார்கள்.

* ஒழுக்கம் இல்லாதவன், வேத சாஸ்திரத்தை நன்கு அறிந்து, புரோகிதராக இருந்தால் அடுத்த ஜென்மத்தில் அவர் கட்டாயம் பன்றி பிறவி எடுப்பார்.

* இந்த பிறவியில் தரித்திர நிலைமையோடு வாழும் ஒருவர், போன ஜென்மத்தில் கஞ்சனாக இருந்திருப்பார்.

* தங்கத்தை திருடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் புழுக்கள் நிறைந்த நரகத்தில் வேலை செய்வான்.

* பிறன் மனைவியின் மீது ஆசைப்படுபவன் அடுத்த ஜென்மத்தில் சண்டாளனாக பிறவி எடுப்பான்.

* பசி என்று வந்தவருக்கு சாப்பாடு இல்லை என்று சொல்லி துரத்தி அடித்தால் அடுத்த ஜென்மத்தில் அவருக்கு புத்திரபாக்கியம் கிடைக்காது.

* கோவில் சொத்தை அபகரித்தவர்கள், பொய்க்கணக்கு எழுதுபவர்கள் எல்லாம் செவிட்டு மாடாகவும், குருட்டு மாடாகவும் பிறவி எடுப்பார்கள்.

* அடுத்தவர்களை துன்புறுத்தி பணம் சேர்ப்பவன், அடுத்த பிறவியில் பூனையாக பிறப்பான்.

* பசுமையாக இருக்கும் மரம், செடி, கொடிகளை வீழ்த்தி எரித்தவன் அடுத்த ஜென்மத்தில் மின்மினிப்பூச்சியாக பிறவி எடுப்பான்.

* வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளியை இழிவாக நடத்தி பழைய சாப்பாடு போட்டு அவமதிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் கருங்குரங்காக பிறவி எடுப்பான்.

* அடுத்தவர்களுக்கு பயன்தரக்கூடிய பூ காய் கனி பழம் நிறைந்த மரத்தை எவனொருவன் வெட்டுகின்றானோ, அவன் அடுத்த ஜென்மத்தில் எதற்கும் உபயோகம் இல்லாதவனாக பிறவி எடுப்பான்.

* நீதிக்குப் புறம்பாக நடந்து கொள்பவன், தவறாக தீர்ப்பு சொல்பவன் அடுத்த ஜென்மத்தில் கோட்டான் பிறவி எடுப்பான். கோள் சொல்லுபவர்கள் பல்லியாகவும், தவளையாகவும் பிறவி எடுக்கிறார்கள்.

* உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காத முதலாளிகள், அட்டைபூச்சி ஆக அடுத்த ஜென்மத்தில் பிறப்பார்கள்.

* அதிகப்படியான லஞ்சத்தை வாங்கிக்கொண்டு, அநியாயத்திற்கு துணை போகும் நபர்கள் அடுத்த ஜென்மத்தில் ஈ கொசு மூட்டைப்பூச்சி ஆக பிறவி எடுப்பார்கள். இவையெல்லாம் தவறு செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகள் தான்.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நாராயணன், கருடனுக்கு கூறியதாக கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஜென்மத்தில் இந்த தவறை செய்தால், அடுத்த ஜென்மத்தில் மேல் குறிப்பிட்டுள்ள தண்டனைகள் கட்டாயம் நமக்கு கிடைக்கும்.

இந்த ஜென்மத்தில் கொசு, புழு, பூச்சி, பல்லி, குரங்கு, முதலை, பன்றி இப்படியாக பிறந்திருக்கும் ஒவ்வொரு உயிரினமும் போன ஜென்ம மனிதப் பிறவியில் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்தவர்கள்தான் என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

இதையெல்லாம் படிக்கும்போது முடிந்தவரை தவறுகள் செய்யாமல் இருப்பது தான் நமக்கு நல்லது. நீங்கள் அறிந்தும், அறியாமலும் தவறுகள் செய்திருந்தால் கூட அதற்கான பிராயச்சித்தத்தை உடனே தேடிக் கொள்ளுங்கள். சில தவறுகளுக்கு பிராயச்சித்தம் கூட தேட முடியாது. தவறு செய்யாமல் வாழ்வதே உத்தமம்.

அடுத்த ஜென்மத்தில் மேற்குறிப்பிட்டுள்ள இப்படி ஒரு பிறவி எடுக்க யாரும் விரும்பமாட்டார்கள். சொர்க்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.