யாழ்ப்பாணத்தில் கூறப்படும் விடயங்களைக் கேட்டு அழிவை நோக்கிச் செல்ல முடியாது

யாழ்ப்பாணத்தில் கூறப்படும் விடயங்களைக் கேட்டு அழிவை நோக்கிச் செல்ல முடியாது. அவர்களது பிரிவினைவாத கருத்துக்களைப் பின்பற்றினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் என்பது மக்களின் ஆணையூடாக ஆணையைப் பிடிப்பதாகும். இலங்கையில் நிறைவேற்றுத்துறையின் அதிகாரம் என்பது சிறுபான்மை மக்களுக்கு இன்றியமைதா ஒன்றாகும். அந்த வகையில் கிழக்கு மக்களின் முழு நம்பிக்கையையும் வென்ற தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதற்கு நாம் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் மிகப் பிரம்மாண்டமான கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அம்பாறையில் தமிழ் பிரதேசங்களில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானித்து கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் இரு வேறு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

நாட்டு மக்கள் மிகுந்த துயரத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முன்வந்தார். அதற்கு செலுத்தும் நன்றிக்கடனாக நாம் மீண்டும் மக்கள் ஆணையை அவருக்கு வழங்க வேண்டும். அம்பாறை தமிழ் மக்கள் நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்கப்படும்.

இதனைப் பயன்படுத்திக் கொண்டு அம்பாறையின் அபிவிருத்தியில் மக்கள் பங்காளர்களாக வேண்டும். வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார். விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதோடு, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றார்.

குறிப்பாக காணி சீர்திருத்த சட்டம் கூட அவரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. எமக்கு தனிப்பட்ட அரசியல் நோக்கம் கிடையாது. பல்வேறு பொது பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

எனவே யாழ்ப்பாணத்தில் கூறப்படும் விடயங்களைக் கேட்டு அழிவை நோக்கிச் செல்லப் போகின்றோமா அல்லது அனைவரும் இணைந்து கிழக்கு மாகாணத்துக்கான அதிகாரத்தையும், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறைக்கு தமிழ் அமைச்சரொருவரையும் பெற்றுக் கொள்ளப் போகின்றோமா? எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்று தீர்மானிக்க முடியாமல் வடக்கில் பிளவடைந்து காணப்படுபவர்களின் தீர்மானங்கள் பயனற்றவை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button