பத்து ஆண்டுகளில் ஒரு நோயாளிக்குக்கூட சிகிச்சையளிக்காத பீகார் மருத்துவமனை
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள முஸாஃபூரில் ஐந்து கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை ஒன்று, பாழடைந்து வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் அந்த மருத்துவமனையில் ஒரு நோயாளிக்குக்கூட சிகிச்சையளிக்கப்படவில்லை என்று ‘இந்தியா டுடே’ தகவல் தெரிவிக்கிறது.
மருத்துவமனை கட்டடத்தின் சில சுவர்கள் இடிந்து கிடக்கின்றன. சமூக விரோதிகளின் புகலிடமாக மருத்துவமனை இருக்கிறது.
சாந்த் புரா பகுதியில் ஆறு ஏக்கர் நிலத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில் 30 படுக்கைகளைக் கொண்ட அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. அதில் நவீன சாதனங்கள் நிறுவப்பட்டு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனை கட்டிய பிறகு திறக்கப்படாமலேயே இருந்துவிட்டது. பத்து ஆண்டுகள் ஆன நிலையில் அந்த மருத்துவமனையை இது வரை சுகாதாரத் துறை பொறுப்பில் எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஒரு நோயாளிக்குக்கூட சிகிச்சையளிக்காமல் மருத்துவ சாதனங்கள் அனைத்தும் சேதமடைந்தன. பல நவீன மருத்துவ சாதனங்களை திருடர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.
மருத்துவமனையின் சன்னல்கள், கதவுகள், வாயிற்கதவுகள், அலமாரிகள் உள்ளிட்டவற்றை திருடர்கள் உடைத்து எடுத்துச் சென்றுவிட்டதால் எலும்புக்கூடாக மருத்துவமனை காட்சியளிக்கிறது.
மருத்துவமனை வளாகத்தில் மூன்று கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒரு கட்டடம், அங்கு குடியிருக்கும் சுகாதார ஊழியர்களுக்கானது. மருத்துவ பரிசோதனை, முக்கிய சிகிச்சை நிலையம் ஆகியவை இதர இரண்டு கட்டடங்களாகும்.
மருத்துவமனை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் அங்கு குடியிருந்தவர்களும் வேறு நகரங்களுக்குச் சென்றுவிட்டனர் என்று அக்கிராமத்தைச் சேர்ந்த சுதிர் குமார் தெரிவித்தார். சுமார் 100,000 பேர் மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் வசிக்கின்றனர்.
மருத்துவமனை நிலை குறித்து தமக்குத் தெரியாது என்று கூறிய துணைக் கோட்ட அதிகாரி ஷ்ரேயா, மாவட்ட நீதிமன்றம், விசாரணைக் குழு ஒன்றை அமைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
சிவில் சர்ஜன் மற்றும் வட்ட அலுவலர்கள் அவர்கள் மட்டத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.