அரசியலில் சில முக்கிய சம்பவங்கள் நடக்கலாம்; தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுமா?
ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் அந்தத் தேர்தலுக்கு முன்னர் அரசியலில் முக்கிய சம்பவங்கள் சில நடக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், அதிலொன்றாக பாராளுமன்ற கலைப்பும் இடம்பெறலாம் என்றும் சில அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்படுமாக இருந்தால் அதற்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்பொன்று இடம்பெறலாம் என்றும், பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் காபந்து அரசாங்கமாக அந்த அமைச்சரவை இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை பாராளுமன்றம் கலைக்கப்படுமாக இருந்தால் அதற்கான தேர்தலை நடத்துவதற்கு தயாராகவே இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறாக முன்கூட்டியே பாராளுமன்றம் கலைக்கப்படுமாக இருந்தால், ஜனாதிபதியாக புதியவர் ஒருவர் தெரிவாகும் பட்சத்தில் அவர் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைத்துள்ளன.
இந்த கூட்டணி அமைக்கும் நிகழ்வில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு பாராளுமன்றத்தில் சுயாதீனமான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவும் கலந்துகொண்டிருந்ததுடன், பாராளுமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டே தாம் கூட்டணியை அமைத்துள்ளதாகவும், வியாழக்கிழமை முதல் தற்போதைய பாராளுமன்றம் இல்லை என்றும் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதேவேளை அடுத்துவரும் வாரங்களில் முக்கிய அரசியல்வாதிகள் சிலர் ஏற்கனவே தாம் ஆதரிக்கும் வேட்பாளர்களை விட்டு வேறு வேட்பாளருக்கு ஆதரவாக கட்சித் தாவல்களில் ஈடுபடலாம் எனவும், முக்கிய பதவிகளில் உள்ள அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் பதவி விலகலாம் என்றும் கூறப்படுகின்றது.
![]()