வெற்றி பெற்றால் நால்வர் கொண்ட அமைச்சரவை; அரசியல் யாப்பின் பிரகாரம் ஏற்பாடு என்கிறார் அனுர
ஜனாதிபதியாக தேர்வானதும் நாடாளுமன்றத்தை கலைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.
கொழும்பின் புறநகர் பகுதியான ஜா-எலவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் இந்த உறுதியை அளித்தார்.
புதிய நாடாளுமன்றம் தேர்வு செய்யப்படும் வரை நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் மூன்று தேர்வுகள் உள்ளதாக அவர் கூறினார்.
இவற்றில் எந்த தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தேசிய மக்கள் சக்தி இடைக்கால அரசாங்கத்தை அரசியலமைப்புக்கு அமைவாக நடத்தும் என்றும் அவர் கூறினார்.
2020 ஆம் அண்டில் வழங்கப்பட்ட மக்கள் ஆணை இப்போது செல்லாது. எனவே, நாடாளுமன்றம் கலைக்கப்படும். அப்படியானால், புதிய நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை அமைச்சரவைக்கு என்ன நடக்கும் என்பதுதான் கேள்வி? என்றார்.
இது குறித்து விளக்கமளித்த அனுர,
“ இடைக்காலத்தின் போது அரசியலமைப்பு ரீதியில் நாட்டை ஆட்சி செய்வோம். நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவுடன் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எமது கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு மாற்றப்படும். நான் உட்பட நால்வர் கொண்ட குழுவுடன், அரசியலமைப்பின் படி அமைச்சரவையை அமைப்போம்”
“இந்த ஏற்பாடு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், அனைத்து அமைச்சு இலாகாக்களையும் அவரது முன்னோட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு வழங்குகிறது. அதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் காபந்து அரசாங்கத்தை அமைக்கலாம்” என்றார்.
“மூன்று தேர்வுகள் உள்ளன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், புதிய நாடாளுமன்றம் ஒன்று தெரிவு செய்யப்படும் வரை தேசிய மக்கள் சக்தி அரசியலமைப்பு முறையில் நாட்டை ஆளும். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு அடுத்த நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.