7 வகை கொரோனா கண்டுபிடிப்பு!
சீனாவில் உள்ள ஃபர் பண்ணையில் நடத்தப்பட்ட சோதனையில் 125 வைரஸ்கள் புழக்கத்தில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்கள் மனிதர்களிடையே பரவும் ஆபத்தும் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது கொரோனாவை போல மிகப் பெரிய பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகெங்கும் கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரியும். அமெரிக்கா தொடங்கி எந்தவொரு நாடும் கொரோனாவில் இருந்து தப்பவில்லை.
கொரோனாவில் இருந்து மீண்டு வரவே பல காலம் ஆகிவிட்டது. இதற்கிடையே சீனாவை சேர்ந்த ஃபர் பண்ணையில் சுமார் 125+ வைரஸ்கள் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவை சேர்ந்த வைராலஜிஸ்ட் எட்வர்ட் ஹோம்ஸ் நடத்திய ஆய்வில் தான் இது தெரிய வந்துள்ளது. லெதருக்காக உள்ளிட்ட தோல் சார்ந்த பொருட்களுக்காகக் குறிப்பிட்ட விலங்குகளை வளர்ப்பதே ஃபர் பண்ணைகள் ஆகும்.
அப்படி அங்கு இருந்த ஃபர் பண்ணை ஒன்றில் தான் சுமார் 125 வகையான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபர் பண்ணைகளில் வைரஸ் கண்காணிப்பு பணிகள் எந்தளவுக்கு முக்கியம் என்பதையே இது உணர்த்துவதாக இருக்கிறது. இதற்கு முன்பு மனிதர்களுக்குத் தெரியாத 36 வைரஸ்களும் இதில் அடங்கும்.
மேலும், இதில் 39 வைரஸ்கள் மனிதர்களை எளிதாகப் பாதிக்கும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த ஃபர் பண்ணைகள் கிட்டதட்ட வைரஸ் குடோன் போல இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2021 முதல் 2024 வரையில் ஃபர் பண்ணைகளில் உயிரிழந்த 461 விலங்குகளை இந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். நரிகள், ரக்கூன் நாய்கள், முயல்கள் ஆகிய விலங்குகளை வைத்து ஆய்வு செய்துள்ளனர். மேலும், சுமார் 50 வன விலங்குகளும் இதில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஹெபடைடிஸ் ஈ மற்றும் ஜப்பானிய மூளையழற்சி போன்ற 13 புதிய வகை வைரஸ்கள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஃபர் பண்ணைகள் எப்படி வைரஸ் குடோன்களாக இருக்கிறது.. அது எவ்வளவு ஈஸியாக மனிதர்களுக்குப் பரவும் ஆபத்து இருக்கிறது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது.
விலங்குகளிடையே பரவும் வைரஸ் குறித்து ஆய்வு செய்து வரும் வைராலஜிஸ்ட் எட்வர்ட் ஹோம்ஸ் இதை மேற்கொண்டுள்ளார். ஃபர் பண்ணைகள் காரணமாக எதிர்காலத்தில் வைரஸ்கள் பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ள எட்வர்ட், இந்த பண்ணைகளை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த பண்ணைகளை மூடவில்லை என்றால் இதில் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இதில் “Pipistrellus bat HKU5” என்பது ஆபத்தான வைரஸ் ஆகும். இது முன்பு வௌவால்களில் கண்டறியப்பட்ட நிலையில், இப்போது அது ஃபர் பண்ணைகளில் இருந்த இரு விலங்குகளின் நுரையீரலில் கண்டறியப்பட்டது. இது மெர்ஸ் (MERS) பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இது மனிதர்களுக்கு ஆபத்தானது என்று எட்வர்ட் ஹோம்ஸ் எச்சரித்தார்.
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ்கள் பரவும் வழித்தடங்களாக ஃபர் பண்ணைகள் அமையக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். பன்றிகள் தொடங்கிப் பல வகை விலங்குகளில் பறவைக் காய்ச்சல் இருப்பதற்கான ஆதாரங்களையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், ஏழு வகையான கொரோனா வைரஸ்களையும் ஆய்வாளர்கள் இந்த ஃபர் பண்ணைகளில் கண்டுபிடித்துள்ளனர்.
ரக்கூன் நாய்கள் மற்றும் மிங்க் ஆகிய விலங்குகளிடம் தான் அதிகளவில் வைரஸ்கள் உள்ளன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த விலங்குகளிடம் உள்ள வைரஸ்கள் மிக எளிதாக மனிதர்களுக்குப் பரவலாம் என்றும் அவை பெருந்தொற்றாக வெடிக்கும் ஆபத்துகளும் அதிகம் என்றும் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச அளவில் பார்க்கும் போது ஃபர் தொழில் பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஒரு தொழிலாகும். இதில் சீனாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் ஃபர் உற்பத்தியில் 80%க்கு மேல் சீனாவில் இருந்து வருகிறது. 2021ஆம் ஆண்டில், 2 கோடிக்கும் அதிகமான விலங்குகளிடம் இருந்து சீனா ஃபர் சேகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.