இந்தியாவின் “தரங் சக்தி” பயிற்சியில் இலங்கை விமானப்படை; பீச்கிராஃப்ட் விமானமும் பங்கேற்பு
இந்தியாவின் “தரங் சக்தி” (“TARANG SHAKTHI”) பயிற்சியில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் (Beechcraft aircraft) பங்கேற்கிறது.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பீச்கிராஃப்ட் விமானம் இந்திய விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட “தரங் சக்தி” வான் போர் பயிற்சியில் இணைந்தது.
மேலும், இந்த பயிற்சியில் 11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 விமானங்கள் பங்கேற்றன.
“தரங் சக்தி “விமானப் போர் பயிற்சியின் முதல் கட்டம் 2024 ஆகஸ்ட் 06 முதல் 14 ஆம் திகதி வரை இந்தியாவின் தமிழ்நாடு, சூலூர் விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், இரண்டாவது மற்றும் இறுதி கட்ட பயிற்சிகள் 14 செப்டம்பர் 2024 அன்று ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் விமானப்படை தளத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விமான போர் பயிற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் பங்களிப்பை வழங்கியுள்ளது.
பூகோள பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்தியாவினால் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய சர்வதேச விமானப் பயிற்சியான “தரங் சக்தி” பயிற்சியில் இலங்கை விமானப்படை பங்குபற்றுவதன் மூலம் இலங்கை விமானப்படைக்கு சர்வதேச இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.
இதனடிப்படையில், இலங்கை விமானப்படையின் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு இதனூடாக புதிய அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.