கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது; புடின் புகழாரம்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு ஆதரவு வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் பிரதான வேட்பாளராக குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக் கட்சி சார்பில் தறபோதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு தொடர்ந்தும் வலுப்பெற்று வருகிறது. புடின் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஜோ பைடனே காரணம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த புடின்,
“அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் தான் எங்களது விருப்பமான வேட்பாளராக இருந்தார். ஆனால் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். ஆகவே நாங்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்கிறோம்.
கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது. அந்த சிரிப்பே அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வைத் தருகிறது. முன்பு ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப், ரஷ்யாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தார்.
கமலா ஹாரிஸ் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார் என நம்புகிறேன். எவ்வாறாயினும் இறுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்றார்.
கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்டாலும் ட்ரம்ப் சராசரியாக 47 வீத ஆதரவுடன் உறுதியான இடத்தில் இருந்து வருகிறார்.