உரிய நேரத்தில் வழங்கப்படாத சிகிச்சை: வவுனியா பொது வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு ஒன்று உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடமாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் சமன் பத்திரன, இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கடந்த 18ஆம் திகதி மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட பெண், உரிய நேரத்துக்குள் தன்னை சத்திரசிகிச்சைக்கு எடுக்காமையாலேயே தனது குழந்தை மரணித்ததாகக் குற்றம் சுமத்தும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இவ்வாறான சிசு மரணங்கள் இடம்பெறும் போது அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என வடமாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் சமன் பத்திரன குறிப்பிட்டார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தாய், அனுமதிக்கப்படும் போதே சில மருத்துவப் பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளைத் தெரிவித்திருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே அவருக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறித்த காணொளியில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பரிசீலனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சமன் பத்திரன குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button