உக்ரேனைத் தாக்க தயாராக இருக்கும் செச்சன் படைகளை நேரில் சந்தித்த புட்டின்
உக்ரேன் மீது தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் செச்சன் படைகளையும் தொண்டூழியர்களையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் செச்சன் தலைவர் ரம்சான் கடிரோவ்வும் ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று நேரில் சந்தித்தனர். கடந்த 13 ஆண்டுகளில் செச்சென்யாவுக்கு அதிபர் புட்டின் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறை.
அண்மையில் ரஷ்யாவின் குர்க்ஸ் பகுதிக்குள் உக்ரேனியப் படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தின. அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்து வருகிறது.
“உங்களைப் போன்ற வீரர்கள் ரஷ்யாவுக்கு இருக்கும்வரை நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது.” என்று செச்சென்யாவில் உள்ள ரஷ்ய சிறப்புப் படைகள் பல்கலைக்கழகத்தில் கூடியிருந்த படை வீரர்களிடம் அதிபர் புட்டின் கூறினார்.
“பயிற்சி நிலையத்தில் துப்பாக்கியால் சுடுவது வேறு. போர்க்களத்தில் சண்டையிடுவது வேறு. அங்கு உங்கள் உயிரைப் பணயம் வைக்கிறீர்கள். ஆனால் தாயகத்தைத் தற்காக்கும் தலையாய கடமை உங்களுக்கு இருக்கிறது. போருக்குச் செல்லும் துணிவும் இருக்கிறது,” என்றார் அதிபர் புட்டின்.
உக்ரேனுக்கு எதிரான போர் தொடங்கியதிலிருந்து 47,000 வீரர்களை செச்சென்யா போரிட அனுப்பிவைத்துள்ளதாக திரு புட்டினிடம் திரு கடிரோவ் தெரிவித்தார்.
அவர்களில் 19,000 பேர் தொண்டூழியர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.