குரங்கம்மையைத் தொற்றுநோயாக வகைப்படுத்தியுள்ள தென்கொரியா
குரங்கம்மை நோயைத் தென்கொரியா தொற்றுநோயாக வகைப்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 21ஆம் தேதியிலிருந்து எட்டு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்வோருக்கு குரங்கம்மைக்கான அறிகுறிகள் இருந்தால் அவர்கள் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளில் உள்ள அதிகாரிகளிடம் அதுகுறித்து உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
ருவான்டா, புருண்டி, உகான்டா, இத்தோப்பியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கென்யா, காங்கோ குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய எட்டு நாடுகளிலிருந்து தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்வோருக்குக் காய்ச்சல், சொறி போன்ற அறிகுறிகள் இருந்தால் பயணிகள் தனிமைப்படுத்தும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
இத்தோப்பியாவிலிருந்து தென்கொரியாவுக்குச் செல்லும் பயணிகளைப் பரிசோதிக்கப் பயணிகள் வரவு நுழைவாயில்களில் தொற்றுநோய் விசாரணை அதிகாரிகளும் மருத்துவர்களும் பணியமர்த்தப்படுவர்.
தென்கொரியாவில் குரங்கம்மை பாதிப்பு ஏற்படாமல் இருக்க கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
விமானத்தில் உள்ள கழிவுநீரைச் சோதிப்பதும் அதில் அடங்கும்.
இந்நிலையில், கிளேட் 1 கிருமிவகை குரங்கம்மை ஆப்பிரிக்காவில் மிக விரைவாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கிருமிவகை மற்ற கிருமிவகைகளைவிட மிகக் கடுமையானது என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.