யார் இந்த முஹம்மது யூனுஸ்…?
பங்களாதேஷின் ஸ்தாபகரான முஜிபுர் ரஹ்மானின் புதல்வியான பிரதம மந்திரி ஹசீனா அந்நாட்டு மக்களின் இடையறாத புரட்சியின் விளைவாக நாட்டைவிட்டும் தப்பியோடியதை தெரிந்திருப்பீர்கள்.
பொதுவாக எந்த நாட்டிலும் மக்கள் புரட்சிகளின் போது, இருக்கும் அதிபரைக் கவிழ்த்திவிட்டு மாற்றீடாக ஒரு அதிபரை அங்கே கொண்டு வந்து நியமிக்கத் தெரிந்த அளவுக்கு புரட்சியாளர்கள் விவரமானவர்களாக இருக்க மாட்டார்கள்.
ஆனால் வங்காளதேசத்தில் கதை முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. ஆம், இந்த முஹம்மது யூனுஸ் என்பவரை நாட்டின் அதிபராக நியமிக்க நாட்டிலுள்ள 160 மில்லியன் குடிமக்களும் ஒருமித்த கருத்தில் இருப்பதில் என்ன ரகசியங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
(ஏழைகளின் வங்கி) என அந்நாட்டில் பெயர்பெற்ற வங்கி ஸ்தாபகர் தான் இந்த
முஹம்மது யூனுஸ். 1976 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பங்களாதேஷில் மிகவும் புத்தாக்கமாகவும், புத்திசாலித்தனமாகவும் மில்லியன் கணக்கான ஆதரவற்ற கீழ்மட்ட
மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்வர்தான் முஹம்மது யூனுஸ் என்ற புண்ணியவான்.
பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்த அவர், தனது மாணவர்களுக்குக் கற்பித்துக் கொடுத்த பொருளாதாரக் கோட்பாடுகள் அனைத்தும் வங்காள சமுதாயத்தின் யதார்த்த நிலைக்கு முற்றிலும் முரணானவைகள் என்பதை முதலில் உணர்ந்தார்.
இந்த மக்களின் தீராத வறுமைக்கான காரணத்தைக் கண்டறிய தனது நகரைத் துறந்து வங்காளம் எங்கும் பரந்துள்ள பின்தங்கிய கிராமங்களுக்கு ஆய்வுப் பயணம் செய்ய முடிவு செய்தார்.
ஏழைக் கிராமங்களின் களநிலவரங்களை ஆய்வு செய்த அவருக்கு பல உண்மைகள் புலப்பட்டன. அங்கிருந்த பெண்கள் மூங்கில் மூலம் செய்யும் கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்து விற்க அவர்களுக்கு வெறும் அரை டாலருக்கும் குறைவான தொகை மட்டுமே மூலதனமாக தேவை என்பதை அவர் தெரிந்துகொண்டார்.
ஆனால் அவர்கள் இதற்காக கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கித்தான் இதனை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதனால் தங்களுக்குக் கிடைக்கும் கொஞ்சநஞ்ச இலாபத்தில் பெரும் பகுதியை வட்டியாகக் கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தனர்.
உடனே முஹம்மத் யூனுஸ் என்ன செய்தார்! 42 கிராமப்புற பெண்களுக்கு மொத்தம் 27 டாலர்கள் மட்டுமே வட்டியில்லாக் கடன் கொடுத்துப் பார்க்க முடிவு செய்தார். முதல் முயற்சியே வியக்கத்தக்க விதத்தில் வெற்றியளித்தது. குறுகிய காலத்தில் அப்பெண்கள் எடுத்த கடனையும் திருப்பிக் கொடுத்தனர், அவர்களும் பெரும் லாபமும் ஈட்டினர்.
இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த நினைத்த முஹம்மது யூனுஸ், ஒரு வங்கியை அணுகி
விவரத்தைக் கூறினார். எங்கும் உள்ள வங்கி அதிபர்கள் போல அந்த வங்கி அதிபரும் நக்கலாக புன்னகைத்தார்.
நூற்றுக்கணக்கான பரம ஏழைகளுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் எப்படி கடன் கொடுக்க முடியும் என்று சொல்லி மறுத்தார். ” அவர்களின் மொத்த கடன்களுக்குமான பொறுப்பை நான் ஏற்கிறேன்” என தைரியமாகக் கூறி, வங்கி அதிபரை சம்மதிக்க வைத்தார்.
அவர் பொறுப்பில் நூற்றுக்கணக்கான ஏழை கிராம மக்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கி கிராமப்புற உற்பத்திகளை ஊக்குவித்தார். அத்தோடு முதலீட்டிற்கான சிறந்த முறைமைகளையும் மற்றும் கடன் பெறுதல், திருப்பிச் செலுத்துதல் பற்றிய விரிவான விளக்கங்களையும் வழங்கி வந்தார்.
இந்த அழகிய வேலைத்திட்டம் பல பின்தங்கிய கிராமங்களில் வெற்றி பெற ஆரம்பித்த போது, 1976 ஆம் ஆண்டில் முஹம்மது யூனுஸ் உலகின் முதலாவது ஏழைகளின் வங்கி என பெயர்பெற்ற (கிராமீன் வங்கி) யை ஸ்தாபிதார்
யூனுஸின் அயராத முயற்சியால் ஆரம்பித்த மேற்படி வங்கியால் 1981 ஆம் ஆண்டி முடிவில் மொத்தமாக வழங்கப்பட்ட கடன் தொகை 14 மில்லியன் டாலர்களை எட்டியது, கடன் பெற்ற 90 சதவீதத்தினர் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த ஏழைப் பெண்களாக இருந்தனர்.
பொதுமக்களின் பணத்தை சுரண்டும் நோக்கை மாத்திரமே கொண்ட உலகின் வங்கிகள் போல் அல்லாமல் முஹம்மது யூனுஸ் முற்றிலும் மாற்றமாக தனது வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் எளியவர்களுக்கு மட்டும் கடன் வழங்க வில்லை. மாறாக எந்தவித சொத்துக்களோ, உத்தரவாதங்களோ இல்லாத பரம ஏழைகளுக்கும் கடன் உதவிகள் வழங்கி கிராமிய கைத்தொழில்களை ஊக்குவித்தார்.
குறிப்பாக பின்தங்கிய கிராமப்புறங்களில் கைத்தொழில் உற்பத்திகளில் ஈடுபட்டுள்ள பெண்களை தேர்தெடுத்து நிபந்தனையற்ற கடன் உதவிகளை வழங்க விரும்பினார். காரணம், இல்லத்தரசிகள் தாங்கள் ஈட்டும் லாபத்தால் வீட்டையும் குழந்தைகளையும் கவனிக்க அதிகம் செலவழிப்பார்கள், இதற்கு மாற்றாக ஆண்கள் பெரும்பாலும் பணம் கிடைக்கும் போது ஊதாரிகளாகவே இருப்பார்கள் என்று அவர் கருதியதாகும்.
மேலும் அவர், ஏழை எளியவர்கள் உழைக்காமல் நலன்புரி நிறுவனங்களின்
உதவிகளை நம்பி வாழும் முறைமையை கண்டித்தார். அது அவர்களை என்றென்றும் சோம்பேறிகளாகவும் நிரந்தர வறுமைக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் என்றும் எச்சரித்தார்.
வெற்றிப்பாதையில் வீறு நடை போட ஆரம்பித்த கிராமீன் வங்கி தற்போது வங்காளதேசத்திலும் வெளிநாடுகளிலும் 2,600 கிளைகளை கொண்டுள்ளது, 26,000 பணியாளர்கள் அவைகளில் பணி புரிகின்றனர்.
வறுமையை ஒழிப்பதிலும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதிலும் அசாதாரண வெற்றி கண்ட முஹம்மது யூனுஸ் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். மேலும் பற்பல சர்வதேச விருதுகளைம் பெற்றுக்கொண்டார். அது போக சர்வதேச பல்கலைக்கழகங்களில் இருந்து 60 க்கும் மேற்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.
இத்தகைய அவரது அபார வெற்றிகள் காட்டேரி ஹசீனாவுக்கும் அவரால் தீனி போட்டு வளர்க்கப்பட்ட பரிவாரங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக இருக்கவில்லை. பொறாமையும் காழ்ப்பும்
அவர்களின் வயிற்றெரிச்சலை மேலும் அதிகப்படுத்தியது. அராஜக அரசு அவர் மீது
இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளையும் வழக்கு விசாரணைகளையும் பதிவு செய்து
பல வருடங்களாக வீட்டுக் காவலில் வைத்திருந்தது.
வங்காள மக்களின் எழுச்சியை அடுத்து கொலைகாரி ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிப்பியோடிய பிறகு “ஏழைகளின் தந்தை என போற்றப்படும் முஹம்மது யூனுஸை தேர்தல் நடைபெறும் வரை, இடைக்கால அதிபராக நியமிக்கக் கோரி, நாட்டு மக்கள் யாவரும் குரல் எழுப்பத் தொடங்கினர்.
முன்மாதிரிமிக்க பொருளாதார ஆளுமை முஹம்மது யூனுஸிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக அருமையான விஷயம் என்னவென்றால், அவர், முன்னொடுக்க வேண்டியியிருந்து இந்த அற்புதமான பொருளாதார புரட்சிக்காக நியாய வாதங்களை பட்டியலிட்டு குறை கூறிக் கொண்டிருக்கவில்லை.
அவர் நினைத்திருந்தால் வங்கதேச மக்களின் வறுமைக்கு, நாட்டில் நிலவிய கட்டுக்கடங்காத ஊழல், சர்வாதிகார அரசு, பக்கத்து நாடுகளினதும் சர்வதேச நாடுகளினதும் சதித்திட்டங்கள் அல்லது நாட்டு மக்களின் சோம்பேறித்தனம் என பற்பல காரணங்களை அடிக்கியிருக்கலாம்.
ஆனால் அவர் தன் பாட்டில் தான் வகுத்த வேலைத்திட்டங்களை ஆரவாரமின்றி முன்னொடுத்துச் சென்றார். முஹம்மது யூனுஸ் வெற்றிகரமான பொருளாதார
நிபுணர் என்ற வகையில் இவரது வாழ்க்கை வரலாற்றையும் வறுமை ஒழிப்புக்காக அவர் வகுத்த புத்தாக்கமான திட்டங்களையும் படித்துப்பயன் பெறும் படி நான் மக்கள் நலன் நாடும் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
![]()