தேர்தல் போட்டியில் இருந்து சஜித் மற்றும் அனுரகுமார விலக வேண்டும்: ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள கோரிக்கை
சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்க ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அநுராதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
சஜித் பிரேமதாச, அனுர திஸாநாயக்க, ஹர்ஷ டி சில்வா அல்லது சுனில் ஹந்துன்நெத்தி போன்ற தலைவர்களால் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவில்லை எனவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது உரையில் குறிப்பிட்டார்.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கணிசமான பொருளாதார முன்னேற்றம் தனது அரசாங்கத்தின் மூலம் உந்தப்பட்டதுடன், இதன் மூலம் விவசாயிகள் வெற்றிகரமான அறுவடைகளை செய்ய முடிந்தது.
எதிர்க்கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுர திஸாநாயக்க ஆகியோர் அரசியல் மேடைகளில் மக்களின் கஷ்டங்களைப் பற்றி பேசுவது கேலிக்கூத்தானது என்றும் ஜனாதிபதி விமர்சித்தார்.
மக்கள் படும் துன்பங்களை அவர்கள் உண்மையிலேயே புரிந்து கொண்டிருந்தால், அவர்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்று நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்பட்டிருந்த போது நானும் பிரதமருமே நாட்டை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தோம். வேறு யாரும் அந்த தருணத்தில் முன்வந்திருக்கவில்லை.
முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பதவி விலகினார். எதிர்க்கட்சித் தலைவர் தப்பியோடினார், அனுர திஸாநாயக்கவை எங்கும் காண முடிந்திருக்கவில்லை.
எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 6,800 ஆக உயர்ந்த போது சஜித் பிரேமதாச மற்றும் அனுர திஸாநாயக்க எங்கே இருந்தார்கள் என்று நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இந்தக் கேள்வியை ஒவ்வொரு கட்டத்திலும் கேட்டுக்கொண்டே இருப்போம். அவர்கள் பதில்களை வழங்க வேண்டும்; முடியவில்லை என்றால் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும்.
சஜித் மற்றும் அநுர இருவரையும் இந்த மேடையின் இருபுறமும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு நான் அழைக்கிறேன்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.