ரஷ்யாவிற்கு போரிடச் சென்ற இலங்கையர்கள் கைது: உக்ரெய்ன் படையினர் தீவிர விசாரணை
ரஷ்யாவிற்கு ஆதரவாகப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற ஐந்து இலங்கை இராணுவ வீரர்கள் போர்க் கைதிகளாக உக்ரெய்ன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு உக்ரெய்ன் அரசாங்கம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர்களது உறவினர்களுக்கும் தூதரகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் தலையீட்டின் பேரில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரெய்ன் போருக்கு இந்நாட்டின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை அனுப்பும் ஆள் கடத்தல் குறித்து அண்மையில் தகவல் வெளியானது.
எவ்வாறாயினும், இந்தப் போரில் உயிரிழந்த இலங்கையர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆள் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.