யாழில் திருவிழாவில் வாண வேடிக்கை புகை, அதிக சக்தி லேசர் ஒளிக்கீற்றுகளால் 385 பேருக்கு மேற்பட்டோருக்கு கண்கள் பாதிப்பு!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்றுக் கிராமத்திலுள்ள ஆலயமொன்றில் வியாழக்கிழமை (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது வாண வேடிக்கையால் ஏற்பட்ட புகை மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்பாடு காரணமாக 385 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம்போதனாவைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களில் 127 பேர் வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளதாக கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 40 பேர் வரை சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சை மற்றும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இரு மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், அவர்கள் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55 பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தத் திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும். கண்களை தேய்க்க வேண்டாம்.
சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம். சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. “பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் அந்த பகுதியில் சுகாதார தரப்பினரால் தொடர்ந்தும் விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை நவாலி அந்திரான் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழாவின் போது வாண வேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பனை மரமொன்றும் மற்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன் சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
![]()