24 மணிநேரத்தில் 56 பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு; சுகாதாரத் துறை அறிவிப்பு
இஸ்ரேல் – பலஸ்தீன போரில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், காஸாப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 56 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் காஸாப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 56 பேர் உயிரிழந்துள்ளமையை அப் பகுதியின் சுகாதாரத் துறை நேற்று புதன்கிழமை தெரிவித்திருந்தது.
இந்த உயிரிழப்புடன் சேர்த்து இப் பகுதியில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,965 ஆக அதிகரித்துள்ளதுடன், 92,294 பேர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி சர்வதேச நாடுகளிலிருந்து நிவாரணப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையால், காஸா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலையைச் சீவுவதற்கு சீப்புக் கூட இல்லாத நிலையில் அங்குள்ள சிறுமிகள் அவர்களது முடியை வெட்டிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இத் தாக்குதலை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றபோதும் இஸ்ரேல் அதனை காதில் வாங்காமல் தொடர்ந்தும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.