காஸா போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஈரான் தாக்குதலைத் தடுக்க முடியும்
காஸா போர் நிறுத்தம் ஏற்பட்டால் இஸ்ரேலை ஈரான் தாக்குவதிலிருந்து தடுக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேலைப் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் மத்திய கிழக்கு வட்டாரம் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது.
இஸ்ரேலுக்கு விடுக்கும் மிரட்டலை கைவிட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விடுத்த அழைப்பை ஈரான் புறக்கணித்ததைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 31ஆம் திகதி டெஹ்ரானில் நடந்த ஜனாதிபதி மசூத் பெஸெஷ்கியன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்மாயில் ஹனியே சென்றபோது கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரானும் அதன் நட்பு நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
இதனை இஸ்ரேல் மறுக்கவோ ஆமோதிக்கவோ இல்லை.
பெய்ருட் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் லெபானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற சக்தி வாய்ந்த போராளி அமைப்பான ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் ஹமாஸ் தலைவரின் மரணத்துக்கு பழிவாங்க ஈரான் சபதம் எடுத்தது.
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஈரான் தாக்குதலை கைவிடுமா என்று கேட்டதற்கு, அதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு என்று ஜோ பைடன் கூறினார்.
நியூ ஓர்லின்சில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை கடினமாக இருந்தாலும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றார் அவர்.
இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் போரால் ஏற்கெனவே மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் வேளையில் அவ்வட்டாரத்தில் மற்றொரு போர் ஏற்படுவதைத் தடுக்க மேற்கத்திய அரசதந்திரிகள் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.