இந்துக்களுக்கு எதிரான வன்முறை; கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
“பங்களாதேஷில் மேற்கொள்ளப்பட்ட இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யுனஸ் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனஸ், இந்து ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
பங்களாதேஷ் கலவரத்தின்போது வன்முறையாளர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கியதில், இந்து மதஸ்தலங்கள், இந்துக்களின் வீடுகள், வணிக வளாகங்கள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஷசீனா பதவி விலகியது முதல் பங்களாதேஷில் சிறுபான்மையின மக்கள் மீது 205 தாக்குல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், டாக்காவிலுள்ள தாகேஸ்வரி ஆலயத்தில் தரிசனம் செய்துள்ளார்.
இதனையடுத்து இந்து அமைப்புகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் 17 கோடி மக்கள் தொகையில், 8 வீதம் பேர் இந்துக்கள் என்ற நிலையில், அவர்கள் பெரும்பாலும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் என கருதியே கலவரக்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள முகமது யூனுஸ், அனைவரும் சம உரிமைகளை கொண்ட மக்கள் என்றும் மக்களுக்குள் வேறுபாடுகளை உருவாக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைவரையும் மனிதர்களாக பார்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அமைப்பு ரீதியான கட்டமைப்புகள் சிதைந்ததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும் அவை சரி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.