இலங்கை

சுமந்திரனின் அனைத்து துரோகங்களுக்கும் துணை நின்றவரே தமிழ் பொது வேட்பாளர்

பொது வேட்பாளரை முன்னிறுத்தியுள்ள வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 13வது திருத்தச் சட்டம் பற்றி பேச்சுவாரத்தை நடத்தியிருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பொதுவேட்பாளர் என்பது என்னைப் பொறுத்தவரை திட்டமிட்ட நாடகம். பொதுவேட்பாளர்களை முன்னிறுத்திய சிவில் அமைப்புக்களும், கட்சி சார்ந்தவர்களும் கடந்த 15 வருடங்களாக ஓற்றையாட்சிக்குள் 13ம் திருத்தச் சட்டத்தை திணிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முழுமையாக உறுதுணையாக செயற்பட்டவர்கள்.

குறிப்பாக விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் இந்தியாவின் கைக்கூலிகள். இவர்கள் கடந்த காலங்களில் 13 வது திருத்தச் சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களை அனுப்பியவர்கள்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை வலியுறுத்திய தரப்புக்கு விளைவுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், மக்கள் மத்தியிலிருந்து வேறுபடாமலிருப்பதற்காகவும் அவர்களை பேணி பாதுகாத்து தொடர்ந்தும் மக்களை அவர்களுடன் வைத்திருப்பதற்கான செய்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

பொது வேட்பாளர் என்ற ஒருவரை நிறுத்திவிட்டு நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருக்கின்றனர். குறிப்பாக செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தனிற்கு விசேட நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனிற்கு யாழ் மாவட்டத்திற்குரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவருடைய அடிமையாக இருக்கக்கூடியவரும் இந்தியாவின் கைக்கூலியாக இருக்கின்ற சுரேன் குருசாமி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியினை சார்ந்தவர்களும் குறித்த சந்திப்பிற்கு சென்றிருக்கிறார்கள்.

மேலும் இச்சந்திப்பின் போது 13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வாக்குறுதியினை பெற்றுக் கொண்டு வந்திருக்கின்றனர். இவர்கள் செய்தது பச்சை துரோகமான செயலாகும்.

இவர்கள் இந்தியாவின் நலனை பேணக்கூடிய நபர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையிலும் தமிழர்கள் இந்த ஆட்சியாளர்களின் மீது அதிருப்தி அடைந்து, ஏமாற்று வேலையை புரிந்து கொண்டு தேர்தலைப் புறக்கணித்து தேர்தலில் ஒதுங்கி இருக்கின்ற நிலைமைக்கு சென்று விடக்கூடாது என்பதற்கான நாடகம் தான் பொது வேட்பாளர்.

தற்போது பொதுவேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அரியநேந்திரன் 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவிருந்து சம்மந்தர்,

சுமந்திரனோடு இணைந்து, குறிப்பாக சுமந்திரனின் அனைத்து துரோகமான செயற்பாடுகளுக்கும் முழுமையாகத் துணை நின்றவர்.

2012 ஆம் ஆண்டு ஜெனிவா உள்ளக விசாரணையின் போது சுமந்திரனுடைய முழு துரோகமான செயற்பாடுகளுக்கும் துணை நின்றவர். மஹிந்த ராஜபக்ச, கோட்டபய ராஜபக்ச மற்றும் இராணுவ தளபதிகளிற்கு எதிராக சர்வதேச விசாரணை இடம்பெறாமல் தடுத்து உள்ளக விசாரணை என்ற போர்வையில் இலங்கையை மீட்டெடுக்கின்ற விடயங்களுக்கு அவர்களிற்கு முழுமையாக துணை நின்றார்கள்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.