இலங்கை

ஜனாதிபதியாக வந்தால் தமிழருக்குத் தீர்வு நிச்சயம் கிட்டும்

“இதுவரை காலமும் நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதம மந்திரியாகவோ பதவி வகிக்கக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இம்முறை அந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தான் முடிவு காண்பேன்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை சந்தித்த மூன்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளிடமே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் ஆகிய இரண்டு கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அழைப்பையேற்று இன்று அவரைச் சந்தித்தன.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ரெலோவின் பேச்சாளர் கு.சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு:-

“ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் அழைப்பையேற்று அவரை  எதிர்க்கட்சி அலுலகத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் எம்.பி. மற்றும் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பியும் சந்தித்தனர்.

மற்றைய தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண பிரதம அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷும் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு பொது வேட்பாளரைக் களமிறக்கியுள்ள நிலையிலேயே அந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கான அழைப்பைத் தனித்தனியாக அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் விடுத்திருந்தார்.

இந்த அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமான தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும், சஜித் பிரேமதாஸ, தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்காகவுமே இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பில் பிரதானமாக தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கும் முகமான சமஷ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்ந்தும் எட்டப்படாமல் இருப்பதனாலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவு வலுப்பெற்றது என்பது தெளிவுபடுத்தப்பட்டது.

இதுவரை காலமும் தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதம மந்திரியாகவோ பதவி வகிக்கக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும், இம்முறை அந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தான் முடிவு காண்பார் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஆகவே, கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மனதில் வைத்துக்கொண்டு தன்னையும் அந்த வேட்பாளர்களோடு அல்லது பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களோடு ஒப்பிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குச் சகல உரிமைகளும் இருக்கின்றன என்றும், அதைத் தான் மதிக்கின்றார் என்றும் தெரிவித்த அவர், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற உங்களுடைய நிலைப்பாட்டுக்குத் தான் மதிப்பளிக்கின்றார் என்றும் கூறினார்.

ஆனாலும் தேசிய ரீதியான தேர்தலில் இன, மொழி, மத மற்றும் பிரதேச ரீதியான அடையாளத்தோடு வேட்பாளர்கள் முன்னிலைப்படுத்துவது ஒற்றுமையைச் சீர்குலைக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை முதல் கட்டமாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபைக் கட்டமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காகத் தான் தயாராகவுள்ளேன் என்று தெரிவித்தார்.

அதற்காகத் தான் வெளிப்படையாகவும் பேசி வருகின்றார் என்றும், யாருக்கும் பயந்து சாக்குப்போக்குகளைச் சொல்வது இல்லை என்றும் தெரிவித்தார்.

இவ்விடயத்தில் தான் உறுதியாக இருக்கின்றார் என்றும், ஜனாதிபதியாக வெற்றி பெறும் பட்சத்தில் உடனடியாக மாகாண சபை அதிகாரப் பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் சார்பில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, எஞ்சியுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு மற்றும் அபகரிப்பைத் தடுப்பது, தமிழ் இளைஞர்கள், யுவதிகள் நீதியற்ற முறையில் கைது செய்யப்படுவது, விசாரணை என்ற போர்வையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கையை நிறுத்துதல், இந்திய மீனவர்களுடைய அத்துமீறலினால் எமது மீனவர்கள் படுகின்ற துன்பம் உட்பட பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இப்படியான பிரச்சினைகளுக்குத் தான் சிறப்புப் பணிக் குழுக்களை அமைத்து தனது நேரடி மேற்பார்வையின் கீழ் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

தான் இலங்கையில் உள்ள அனைத்து இனங்களையும் அனைத்து மதங்களையும் நேசிப்பவன் என்றும், தான் ஒரு இனவாதி அல்ல என்பதையும் தமிழ் மக்கள் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும், ஆகவே வரும் ஜனாதிபதித் தேர்தலிலே தனக்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவருடைய கருத்துக்களைப் பரிசீலித்து மற்றவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்துவதாகத் தமிழர் தரப்பில் தெரிவித்ததுடன் சந்திப்பு முடிவு பெற்றது.” – என்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.