ரணிலை ஏன் மொட்டு ஆதரிக்கவில்லை ?
வடக்கு, கிழக்கிற்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கிவிடுவார் என்ற அச்சத்தினாலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மாத்தளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் முதலில் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக்க எதிர்பார்க்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக்கவே எதிர்பார்த்தோம். நாங்கள் ஒன்றாக ரணில் விக்கிரமசிங்கவை எங்களுடன் இணைந்து போட்டியிடுமாறு கோரினோம். ஆனால் முதலாவதாக நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாட்டின் ஒற்றையாட்சி தொடர்பிலேயே கேட்டோம். அதாவது 13ஆவது அரசியலமைப்பின் கீழ் வடக்கு, கிழக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்குவீர்களா? என்றே கேட்டோம். ஆனால் அது தொடர்பில் தன்னால் கூற முடியாது என்று தெரிவித்தார்.
இவ்வாறான நிலைமையில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கிய பின்னர் பொலிஸ், காணி அதிகாரத்தை அவர் வழங்கினால் நாங்கள் என்ன செய்வோம். காற்சட்டையை தலையால் அணிந்து கொண்டா நாங்கள் வெளியே போவது.
துறைமுகத்தை விற்பனை செய்யும் போது அவரிடம் எந்தவொரு வேலைத் திட்டமும் இல்லை. விற்பனை செய்து 1.5 பில்லியன் டொலர்களை பொக்கட்டுக்குள் போட்டுக்கொண்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில் வெற்றி பெறுபவர்கள் ரணிலுடன் இணைந்து பயணிக்குமாறு கூறுகின்றனர்.
எவ்வாறு ரணிலுடன் செல்வதென்று நாங்கள் கேட்கின்றோம். இரண்டு, மூன்று ஆண்டுகளாகும் போது அவர் நாட்டையே விற்று எழுதிவிடுவார். அதில் பங்குதாரர் ஆகவா கூறுகின்றீர்கள்.எங்கள் கட்சியில் ஒருவர் இருந்தாலும் நாங்கள் எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயணிப்போம் என்றார்.